சச்சின், தோனிக்கு ஓய்வு * சேவக் கேப்டன்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சச்சின், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சேவக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 29ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.

மற்ற போட்டிகள் விசாகபட்டினம் (டிச., 2), ஆமதாபாத் (டிச., 5), இந்தூர் (டிச., 8), சென்னை (டிச., 11) ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. முதல் மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்களை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.


சச்சின் இல்லை:

இதில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின், இதுவரை ஒரு ஒருநாள் போட்டியில் கூட சச்சின் விளையாடவில்லை.

இதன்மூலம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது சர்வதேச சதத்தை நழுவவிட்ட சச்சின், ஒருநாள் தொடரில் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.


சேவக் கேப்டன்:

இந்த ஆண்டு இதுவரை 11 டெஸ்ட், 24 ஒருநாள், மூன்று சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் விளையாடிய கேப்டன் தோனி, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தொடர்ச்சியாக விளையாடி வரும் இவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கேப்டன் பொறுப்பு அதிரடி துவக்க வீரர் சேவக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள சேவக், நான்கு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். துணைக் கேப்டனாக மற்றொரு துவக்க வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பருக்கு பார்த்திவ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


யுவராஜ் காயம்:

சமீபத்திய உலக கோப்பை தொடரில் "தொடர் நாயகன்' விருது வென்ற யுவராஜ் சிங், போதிய உடற்தகுதி இல்லாததால், தாமாகவே விலகிக் கொண்டார். விரைவில் இவர், நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு "ஆப்பரேஷன்' செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக "பார்மின்றி' தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடரில் சுழலில் அசத்திய அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரக்யான் ஓஜா தேர்வு செய்யப்படவில்லை. இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக ராகுல் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ரகானே வாய்ப்பு:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய அஜின்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பிரவீண் குமார், வினய் குமார் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணி: சேவக் (கேப்டன்), காம்பிர் (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரவிந்திர ஜடேஜா, பிரவீண் குமார், வினய் குமார், வருண் ஆரோன், உமேஷ் யாதவ், அஷ்வின், ராகுல் சர்மா.

0 comments:

Post a Comment