பரிசு மழையில் இந்திய கபடி சாம்பியன்கள்

உலக கோப்பை வென்ற இந்திய கபடி வீரர், வீராங்கனைகள் பரிசு மழையில் நனைகின்றனர். ஆண்கள் அணிக்கு ரூ. 2 கோடி பரிசுடன் அரசு வேலையும் காத்திருக்கிறது.

பஞ்சாப்பில், ஆண்களுக்கான 2வது உலக கோப்பை கபடி தொடர் நடந்தது. நேற்று முன்தினம் லூதியானாவில் நடந்த பைனலில் இந்தியா, கனடா அணிகள் மோதின.

இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 63-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2010-11) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 2 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த கனடாவுக்கு, ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்பட்டது. இதுதவிர, இளம் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பாகிஸ்தான் அணி 60-22 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.


பெண்கள் அபாரம்:

முன்னதாக நடந்த பெண்களுக்கான உலக கோப்பை கபடி பைனலில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் அசத்தலாக ஆடிய இந்திய அணி 44-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இத்துடன், அனைத்து வீராங்கனைகளுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

1 comments: