நூறாவது சதத்துக்கு, 100 தங்க காசுகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், சச்சின் தனது 100வது சதத்தை அடித்தால், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் 100 தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இதுவரை 48 ஒருநாள், 51 டெஸ்ட் என, மொத்தம் 99 சதம் அடித்துள்ளார்.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், சதம் அடித்தார்.

இதற்குப் பின் தனது நூறாவது சதத்தை அடிப்பதில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஏமாற்றினார். இதனால் சச்சின் தனது சொந்த ஊரான மும்பையில் இந்த இலக்கை எட்டுவார் என்று நம்பப்படுகிறது.

ஒருவேளை மும்பையில் சாதித்தால், எம்.சி.ஏ., சார்பில் சச்சினுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.சி.ஏ., இணைச் செயலர் நிடின் தலால் கூறியது:

கோல்கட்டா டெஸ்டில் சச்சின், சர்வதேச அளவிலான நூறாவது சதத்தை எட்டினால், அவருக்கு 100 தங்க காசுகள் கொடுக்க, பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே உறுதி அளித்து இருந்தது. ஆனால் சச்சின் ஏமாற்றினார்.

இதையடுத்து தனது சொந்த ஊரான மும்பையில் சச்சின், இந்த சாதனை படைத்தால், அவருக்கு 100 தங்க காசுகள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு நிடின் தலால் கூறினார்.

0 comments:

Post a Comment