லட்சுமணுக்கு தேவை 45 நிமிடங்கள்

ஐந்தாவது வீரராக களமிறங்குவது லட்சுமணுக்கு சாதகம். பூஜைகளை முடித்து விட்டு "பேட்டிங்கிற்கு' தயாராக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்,''என, சேவக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் "சியட்' சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில், இங்கிலாந்தின் டிராட்(சிறந்த வீரர்+பேட்ஸ்மேன்), இந்தியாவின் கோஹ்லி(இளம் வீரர்), ரெய்னா("டுவென்டி-20' வீரர்), வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வால்ஷ்(வாழ்நாள் சாதனையாளர்) உள்ளிட்டோர் விருதுகள் பெற்றனர்.

தவிர, லட்சுமண்(இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவை), சேவக்(சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டு நிறைவு) சிறப்பு விருதுகளை பெற்றனர். அப்போது லட்சுமண் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட சேவக் கூறியது:

வீரர்களுக்கான "டிரஸ்சிங் ரூமில்' லட்சுமண் பதட்டப்படாமல் இருப்பார். "பேட்டிங்' வரிசையில் ஐந்தாவது வீரராக களமிறங்குவதால், இவருக்கு போதுமான நேரம் கிடைப்பதுண்டு. இரண்டு முறை "ஷவரில்' குளித்து விட்டு, பூஜைகள் செய்வார்.

தொடர்ந்து சிறிய பயிற்சிகள் மேற்கொள்வார். இவற்றை எல்லாம் முடித்து, "பேட்டிங்' செய்ய உடல் அளவில் தயாராக இவருக்கு எப்படியும் 45 நிமிடங்கள் தேவைப்படும். இப்படி "ரிலாக்சாக' இருப்பது தான் இவரது அமைதியான குணத்தின் ரகசியம்.

லட்சுமண் போன்ற நல்ல நண்பர் கிடைக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனதில் பட்டதை நேர்மையாக சொல்வார். உதாரணமாக, 2001ல் அப்போதைய கேப்டன் கங்குலி, பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோர் என்னை துவக்க வீரராக களமிறங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அந்த நேரத்தில் குறுக்கிட்ட லட்சுமண்,"இதனை ஒருபோதும் ஏற்க வேண்டாம். இத்தவறை ஏற்கனவே செய்த நான் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். துவக்க வீரராக களமிறங்க முடிவு செய்தால், உனது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான்' என எச்சரித்தார்.

இதற்கு பதில் அளித்த நான்,"தற்போது "ரிஸ்க்' எடுக்க அனுமதியுங்கள். இதில், வெற்றி கிடைத்தால் நல்லது. தவறினால், உங்களுடன் "மிடில் ஆர்டரில்' இடம் கிடைக்க போட்டியிடுவேன்,'என்றேன்.


லட்சுமண் வழங்கிய ஆலோசனைகள் எனக்கு உதவிகரமாக அமைந்துள்ளன. இதற்காக, எனது பரிசுத் தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் "ஜாலியாக' குறிப்பிட்டார். இதனை ஏற்க இயலாது. ஏனென்றால் அவருக்கு பெரிய தொகையை கையாளத் தெரியாது. அவரது பரிசு தொகையை என்னிடம் வழங்கினால், நல்ல முறையில் முதலீடு செய்வேன்.


அதிரடி ஆட்டம்:

இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விளையாட துவங்கிய காலத்தில் அதிரடியாக ரன் எடுக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்தினர். போட்டிக்கு முன் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன்.

களமிறங்கிய முதல் நிமிடத்தில் இருந்து, அனைத்து பந்திலும் ரன் எடுக்க முற்படுவேன். "பேட்' செய்யும் போது எனக்கு பிடித்த கி÷ஷார் குமாரின் "சலா ஜாத்தா ஹூன்' என்ற பாடலை பாடுவது வழக்கம்.
இவ்வாறு சேவக் கூறினார்.

0 comments:

Post a Comment