ஈடன் கார்டனில் 100வது சதம்

சச்சின் தனது 100 வது சதத்தை, பாரம்பரியமிக்க கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் எட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார்.

அதன் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லியில் நடந்த முதல் டெஸ்டில், சதம் எட்டுவார் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் முதல் இன்னிங்சில் 7 ரன்கள் எடுத்த போது, அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,) அவசரப்பட்டு சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுத்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில், 91 ரன்கள் எடுத்திருந்த போது, பிரஸ்னன் பந்தில் இதே ராடு டக்கர் தான், சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுத்து வெறுப்பேற்றினார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,"" கடந்த 2010 தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில், சச்சின் 106 ரன்கள் எடுத்தார். 2002ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் 176 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதனால், இம்முறை ஈடன் கார்டனில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் (நவ., 14-18), சச்சின் சதத்தில் சதம் என்ற புதிய சாதனையை எட்டுவார் என்று நினைக்கிறேன்.

தவிர, இங்கு அதிக ரசிகர்கள் வருவதும் கூடுதல் ஆதரவாக இருக்கும்,'' என்றார்.

0 comments:

Post a Comment