ஹர்பஜனுக்கு மீண்டும் கைவிரிப்பு

ஆஸ்திரேலியா செல்லும் டெஸ்ட் அணியில் ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ரோகித் சர்மாவுடன் ஜாகிர் கான், பிரவீண் குமாரும் இந்திய அணியில் இடம் பெற்றனர்.

வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச., 26ம் தேதி, மெல்போர்னில் துவங்குகிறது.

அடுத்த மூன்று போட்டிகள் சிட்னி (2012, ஜன., 3-7), பெர்த் (ஜன., 13-17), அடிலெய்டில் (ஜன., 24-28) நடக்கவுள்ளது.

இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் ஜக்தலே அறிவித்தார். கேப்டன் தோனி தலைமையிலான இந்த அணியில் காம்பிர், சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோர் வழக்கம் போல இடம் பெற்றுள்ளனர். சேவக்கிற்கு துணைக் கேப்டன் அந்தஸ்து தரப்பட்டுள்ளது.


யுவராஜ் இல்லை:

"மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நுரையீரல் பிரச்னை காரணமாக யுவராஜ் சிங், இத்தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை. ராகுல் சர்மா நீக்கப்பட்டார்.


சந்தேகத்தில் ஜாகிர்:

வேகப்பந்து வீச்சு பிரிவில் இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் ஆகியோருடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய உமேஷ் யாதவ், வருண் ஆரோனும் இடம் பெற்றனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜாகிர் கான் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஞ்சி தொடரில் இவர் உடற் தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், அணியில் இருந்து நீக்கப்படுவார்.


ஹர்பஜன் பரிதாபம்:

மோசமான "பார்ம்' காரணமாக சமீபத்திய தொடர்களில் புறக்கணிக்கப்பட்டு வரும் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என்பதால், எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய சுழல் சூறாவளிகளாக உருவெடுத்துள்ள அஷ்வின், பிரக்யான் ஓஜா இருவரும் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

கூடுதல் விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் இடம் பெறலாம் என்ற நிலையில், எதிர்பாராதவிதமாக சகா வாய்ப்பை தட்டிச் சென்றது, பெரிய ஆச்சரியமாக இருந்தது.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக் (துணைக் கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின், லட்சுமண், விராத் கோஹ்லி, அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ரோகித் சர்மா, பிரக்யான் ஓஜா, பிரவீண் குமார், ரகானே, சகா, ஜாகிர் கான்.

0 comments:

Post a Comment