இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிய டேரன் பிராவோவின் சதம் வீணானது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் லட்சுமண் (176*), தோனி (144), டிராவிட் (119) கைகொடுக்க இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 631 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு சுருண்டு "பாலோ-ஆன் பெற்றது.

பின், 478 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ (38), சந்தர்பால் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.


பிராவோ அபாரம்:

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் (47) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மறுமுனையில் அபாரமாக ஆடிய டேரன் பிராவோ, டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்ததை பதிவு செய்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த சாமுவேல்ஸ், அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த போது பிராவோ (136) அவுட்டானார்.


சாமுவேல்ஸ் ஆறுதல்:

அடுத்து வந்த கார்ல்டன் பாக் (3) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சாமுவேல்ஸ் (84), அஷ்வின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தேவேந்திர பிஷூ (0) ஏமாற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 463 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிடல் எட்வர்ட்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4, இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, அஷ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

0 comments:

Post a Comment