வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்தியா ரெடி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் சாதிக்க, இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். முதல் போட்டி நடக்க உள்ள டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட், நாளை டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் துவங்குகிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கோல்கட்டா (நவ., 14-18), மும்பை (நவ., 22-26) ஆகிய இடங்களில் நடக்கிறது.

வலை பயிற்சி:
டில்லி டெஸ்டில் சாதிக்க, தோனி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர்,
பயிற்சியாளர் பிளட்சர் முன்னிலையில் நேற்று வலைப் பயிற்சி மேற்கொண்டனர். முதலில் துவக்க வீரர்களான சேவக், காம்பிர் ஜோடி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரது வேகப்பந்துவீச்சில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். அதன்பின் அஷ்வின், பிரக்யான் ஓஜா, ராகுல் சர்மா ஆகியோரது சுழலில் பயிற்சி மேற்கொண்டனர்.

பயிற்சியில் சச்சின்:
இதேபோல "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் சிறிது நேரம் வேகம் மற்றும் சுழற்பந்துவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பின் சச்சின், பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் ஆகியோருடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின் விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், அஜின்கியா ரகானே ஆகியோரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அஷ்வின், ஓஜா ஆகியோருக்கு சிறிது நேரம் பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் முன்னிலையில் சுழற்பந்துவீச்சு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் நேற்று பயிற்சி மேற்கொண்டனர்.

0 comments:

Post a Comment