டெஸ்ட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீதான மக்களின் ஆர்வம் குறையவில்லை என தேசிய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார்.

கோவை ஜிஆர்டி அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தலைமை வகித்து ஸ்ரீகாந்த் பேசியது:

முன்பைக் காட்டிலும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக பணமும், புகழும் இப்போது கிடைக்கிறது. அதனால் கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும், வளர்ச்சிப் பாதையில் கிரிக்கெட் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

20-20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான பிறகு டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 20-20 கிரிக்கெட்டை எப்படி ஆர்வமாகப் பார்க்கிறார்களோ அதுபோலவே டெஸ்ட் போட்டியையும் ஆர்வத்தோடு மக்கள் கண்டுகளிக்கின்றனர். அண்மையில் நடந்த இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பே இதற்கு உதாரணம்.

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள்தான் பிற்காலத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். தமிழக கிரிக்கெட் வீரர்களிடம் அனைத்து திறமைகளும் நிறைந்துள்ளன. அவற்றை வெளியே கொண்டுவர அவர்களுக்கு தேவை ஊக்கம் மட்டும்தான். அதனால் விளையாட்டு வீரர்களை மக்களும், ஊடகங்களும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய சாதனைகளை இளம் விளையாட்டு வீரர்கள் படைப்பர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் வேளையில், இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என சிலர் குறை கூறுகின்றனர். உலகக் கோப்பையை மனதில் கொண்டு திறமை வாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கத் துவங்கிவிட்டோம்.

மாணவ, மாணவியர் படிப்பை முடித்தவுடன் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து அதில் பணியாற்றலாம். பணியின் மீது அளவு கடந்த பக்தியும், மரியாதையும் இருக்க வேண்டும்.

வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருப்பது மனதுக்குள் பதுங்கி இருக்கும் பயம்தான். மனதில் உள்ள பயம் என்னும் தாழ்வு மனப்பான்மையை ஒழித்துக்கட்டிவிட்டால், எத்தகைய சாதனையையும் செய்து காட்டும் அபரிமிதமான சக்தி வெளிப்படும்.

முதலில் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும். அந்த இலக்கை அடைந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும் இணையே கிடையாது என்றார் ஸ்ரீகாந்த்.

0 comments:

Post a Comment