ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்

ஊக்கமருந்து சோதனையில் நைஜீரிய தடகள வீரர் சாமுவேல் ஒகான் சிக்கினார்.
டில்லியில் 19 வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது.


இத்தொடரில் சுமார் 1,500 பேரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சர்ச்சைக்குரிய 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்ட, நைஜீரியாவின் ஒசயேமி ஒலுடமோலா, தடை செய்யப்பட்ட "மெத்தில் எக்சாமின்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.


இதையடுத்து தற்காலிகமாக "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, இவர் "பி' சாம்பிள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார். இதிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இவரது தங்கம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.


இதனிடையே நைஜீரியாவைச் சேர்ந்த தடகள வீரர் சாமுவேல் ஒகானும், தடைசெய்யப்பட்ட "மெத்தில் எக்சாமின்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் ஆகியுள்ளது. இவர் 110 மீ., தடை ஓட்டத்தில் ஆறாவதாக வந்தார். இதனால் இவருக்கு "பி' சாம்பிள் சோதனை நடத்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.


பெனல் சோகம்:இதுகுறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல் கூறியது: இதுவரை 1200 பேரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தியுள்ளோம். இதில் இரண்டாவது முறையாக நைஜீரிய வீரர் பிடிபட்டுள்ளது வருத்தம் தான்.

மெத்தில் எக்சாமின் என்பது ஊக்கமருந்து மையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீரர்களுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஆனால் பிடிபட்ட இருவரும் ஒரே மாதிரியான பொருளை, ஏன் பயன்படுத்தினார்கள் என தெரியவில்லை.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடத்த உள்ளோம். ஒருவேளை உணவூட்ட பொருட்கள் மூலம் வந்திருக்கலாம். ஏனெனில் உலகளவில் ஒழுங்கான உணவூட்ட முறைகள் இல்லாமல் தான் உள்ளது. தவிர, இந்த பொருட்கள் எளிதாகவும் கிடைக்கிறது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) இதுகுறித்து சர்வே எடுக்க குழுவை நியமிக்க வேண்டும். தடைசெய்யப்பட்டுள்ள மருந்துபொருட்கள் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இதுகுறித்து நைஜீரிய அணியின் குழு தலைமை அதிகாரியுடன் விவாதித்தோம். அவர்கள் இதை சீரியசான பிரச்னையாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் இது போட்டியின் போது நடத்தப்பட்ட சோதனை தான். அடுத்து சம்பந்தப்பட்ட நாடு மற்றும் சர்வதேச கூட்டமைப்புகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தும்.

இவ்வாறு பெனல் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment