இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை "ரோல் மாடலாக' கொண்டிருப்பவர்கள் நிறைய உள்ளனர். இவர்கள் வரிசையில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதித்த, இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார் தற்போது இணைந்துள்ளார்.
கடந்த 2006ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றார் விஜய் குமார். டில்லியில் நடந்த 19வது காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி உட்பட நான்கு பதக்கம் வென்று சாதித்தார்.
இதுகுறித்து விஜய் குமார் கூறியதாவது: டில்லி, காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் உட்பட நான்கு பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், எனது "ரோல் மாடல்'. இவர், நிறைய இளம் வீரர்களுக்கு "ரோல் மாடலாக' உள்ளார். இதற்கு இவரது கடின உழைப்பு தான் முக்கிய காரணம்.
போட்டியில் சாதிப்பதற்கு சீனியர் வீரர்களான அபினவ் பிந்த்ரா, ஜாஸ்பால் ரானா உள்ளிட்டோரின் ஆலோசனைகள் கைகொடுத்தது. இவர்களது அனுபவத்தை, சிறந்த பாடமாக எடுத்துக் கொண்டதால், சாதிக்க முடிந்தது.
2004ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரத்தோர், இம்முறை காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காதது ஏமாற்றமான விஷயம். இவரது சமீபத்திய செயல்பாடு சிறப்பாக இல்லாததால், தேர்வு செய்யவில்லை என நினைக்கிறேன். இது இந்திய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் விதிமுறையில் ஒன்று. இம்முறை நான்கு பதக்கம் வென்ற போதிலும், எனது "பார்ம்' சரியாக இல்லையென்றால், அடுத்து நடக்கும் தொடரில் பங்கேற்க முடியாது.
காமன்வெல்த் போட்டியை தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் பதக்கம் வெல்ல திட்டமிட்டுள்ளேன். இதற்காக தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிறிது காலம் எனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு, பின் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேவையான பயிற்சி மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு விஜய் குமார் கூறினார்
0 comments:
Post a Comment