இந்தியாவுக்கு தங்க மழை

காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா "ஹாட்ரிக்' தங்கம் வென்றது. ரவிந்தர் சிங், சஞ்சய், அனில் குமார் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் அசத்திய இந்தியா, நேற்று மட்டும் 5 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியது.


"ஹாட்ரிக்' தங்கம்:டில்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் மல்யுத்த போட்டிகள் நடந்தன. இதன், "கிரிக்கோ-ரோமன்' 60 கி.கி., பிரிவில் ரவிந்தர் சிங் கலக்கினார். துவக்க சுற்றில் இலங்கையின் குமாராவை 13-0 என வென்றார். பின் அரையிறுதியில் நைஜீரிய வீரர் ரொமேசோ ஜேம்சை வீழ்த்தினார்.


பரபரப்பான இறுதிப் போட்டியில் ரவிந்தர் மற்றும் இங்கிலாந்தின் கிறிஸ்டபர் டெரன்ஸ் போசன் மோதினர். முதல் சுற்றில் ரவிந்தர் 2-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் சற்று திணறினார். ஆனாலும், நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிந்தர் 9---0 என்ற கணக்கில் வென்று, மல்யுத்தத்தில் முதல் தங்கம் கைப்பற்றினார். போசன், வெள்ளி மற்றும் நைஜீரியாவின் ரொமேசோ ஜேம்ஸ், வெண்கலம் வென்றனர்.


"கிரிக்கோ-ரோமன்' 74 கி.கி., பிரிவில் இந்தியாவின் சஞ்சய், தங்கம் வென்றார். இவர், தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட் பிரயன் அடினாலை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். "கிரிக்கோ-ரோமன்' 96 கி.கி., பிரிவில் மற்றொரு இந்திய வீரரான அனில் குமார், ஆஸ்திரேலியாவின் ஹசன் பகிரியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.


தங்கம் வென்றது குறித்து ரவிந்தர் கூறுகையில்,""காமன்வெல்த் மல்யுத்தத்தில் "கிரிக்கோ-ரோமன்' பிரிவு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், முதல் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்முறை தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், எளிதில் வெற்றி பெற முடிந்தது,''என்றார்.



அரையிறுதியில் விர்தவால்
நீச்சலில் 50 மீ., "பட்டர் பிளை' பிரிவின், அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் விர்தவால் காடே. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், விர்தவால் காடே, அர்ஜுன் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 24. 72 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்த காடே, 8 வது இடம் பிடித்தார். அர்ஜூன் 20 வது (26.37 வினாடி) இடம் பிடித்தார். முதல் 16 இடங்கள் பெற்றவர்கள், அரையிறுதிக்கு முன்னேறினர். பாரா ஸ்போர்ட்ஸ் பெண்கள் நீச்சல் (50 மீ., பிரீ ஸ்டைல்) பிரிவில், இந்தியாவின் கிரண் டாக், அன்ஜானி படேல் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.


சோம்தேவ் அசத்தல்
டென்னிஸ், ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பகாமசின் டேவின் முல்லிங்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், சோம்தேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் முல்லிங்சை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக் முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில், இலங்கையின் தினேஷ்காந்தன், அம்ரேஷ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


ஏமாற்றம்
பெண்களுக்கான நெட் பால், போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 113-18 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்றைய 2 வது சுற்றுப் போட்டியில், இந்திய அணி, மாலவி அணியை எதிர்கொள்கிறது.


லான் பவுல்சில் கலக்கல்
லான் பவுல்சில், இந்திய அணி நேற்று அசத்தியது. இந்தியாவின் தினேஷ், பிரின்ஸ் ஜோடி 3-1 என்ற செட் கணக்கில் நமீபியாவின் வில்லியம் எராஸ்மஸ், வில்ஜோயன் ஜோடியை வீழ்த்தியது. குரூப் "பி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியிலும், இந்த ஜோடி 5-1 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் ரிச்சர்ட், டேனி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில், பிங்கி, டானியா, ரூபா ராணி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஜோடி, போட்ஸ்வானாவின் டிபோன், மார்டன், சென்னா நெல்லி ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம் லான் பவுல்ஸ் போட்டியில், இந்திய அணி நேற்று "ஹாட்ரிக் வெற்றி' பெற்று அசத்தியது.


குத்துச் சண்டை அபாரம்
குத்துச்சண்டை 64 கி.கி., பிரிவில், இந்திய வீரர் மனோஜ் குமார், சியாரோ லியான் நாட்டை சேர்ந்த டேனியல் லசோயாவை வீழ்த்தினார். 49 கி.கி., குத்துச் சண்டைப் போட்டியில், மற்றொரு இந்திய வீரர் அமன்தீப் சிங், கென்யாவின் பீட்டரை வீழ்த்தினார். இவ்வெற்றியின் மூலம் இந்திய வீரர்கள் இருவரும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.


வெடிகுண்டு மிரட்டல்
காமன்வெல்த் விளையாட்டு கிராமத்துக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டெலிபோனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, அந்த நபர் பெயரை வெளியிட வில்லை. இதனையடுத்து விளையாட்டு கிராமத்தில் உள்ள 34 அடுக்குமாடி குடியிருப்புகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர். தவிர, பிரகதி மெய்டனில் உள்ள மீடியா சென்டரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது வெறும் புரளி என டில்லி போலீசார் தெரிவித்தனர். மேலும் டெலிபோனில் பேசிய அந்த சிறுவனை கைது செய்தனர்.


ஹாக்கி: இந்தியா வெற்றி
காமன்வெல்த் போட்டியில், நேற்று நடந்த ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

0 comments:

Post a Comment