ஹாட்ரிக் சாதனையாளர்

உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ். இவர் 1974-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி இலங்கையின் மட்டுமகாலாவில் பிறந்தார். இளமையிலேயே சிறந்த இடது கை பந்துவீச்சாளராக மட்டுமன்றி, இடது கை பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்ந்தார்.

இலங்கையின் உள்ளூர் அணியில் விளையாடத் துவங்கிய வாஸ், 1994-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் கண்டார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதே ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார்.

இலங்கையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

2001-02-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக இருந்தார். அதில் ஒரு டெஸ்டில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆசிய துணைக் கண்டத்திலிருந்து இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு முன் பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். அதில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தினார்.

2007-ம் ஆண்டு தனது 97-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

2008-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

தனது அபார பந்துவீச்சு மூலம் 2004-ம் ஆண்டு ஐசிசியின் உலக டெஸ்ட் மற்றும் ஒருநாள் லெவன் அணிகளில் இடம்பிடித்தார். 2005-ம் ஆண்டிலும் உலக டெஸ்ட் லெவன் அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் ஐசிசியின் உலக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

15 ஆண்டுகள் இலங்கை அணிக்காக சிறப்பாக ஆடிய வாஸ் 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ், 355 விக்கெட்டுகளையும், 3,089 ரன்களையும் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 13 அரைசதங்களும் அடங்கும். இதேபோல் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 2,025 ரன்களையும் குவித்துள்ளார்

0 comments:

Post a Comment