சச்சினின் 101 பாராட்டு

காமன்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு, சச்சின் "101' பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த 19வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் வென்றது. இதன் மூலம் முதன் முறையாக 101 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன. இதுதொடர்பாக இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தனது "டுவிட்டர்' இணையதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதில், ""காமன்வெல்த் போட்டியில் சாதித்து பதக்கம் வென்ற 101 சாம்பியன்களுக்கும், 101 வாழ்த்துக்கள். உங்களது கடின உழைப்பும், பல்வேறு தியாகங்களும் தான் தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. உங்களால், நாங்கள் பெருமைப்படுகிறோம்,'' என, தெரிவித்துள்ளார்.

இதேபோல பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையதளத்தில்வெளியிட்ட செய்தி:

காமன்வெல்த் போட்டியை நடத்துவது என்ற பொறுப்பை, நமது நாடு சிறப்பாக செய்து காட்டியுள்ளதை வியந்து பாராட்டுகிறேன். இம்முறை அதிக பதக்கங்கள் பெற்று, காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை. வீரர்கள் விடா முயற்சியுடன் கடுமையாக போராடியுள்ளனர்.

இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல மனஉறுதியுடனும், வலிமையுடனும் செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன். "வெல்டன்' இந்தியா!
இவ்வாறு அமிதாப்பச்சன் பாராட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment