பிச்சுக்கிச்சு பி.சி.சி.ஐ., - அவுட் ஆகிறார் சீனிவாசன்



உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சூதாட்ட விவகாரத்தில் சிதறிப் போயிருக்கிறது. 

நேற்று பிரிமியர் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து ராஜிவ் சுக்லா அதிரடியாக ராஜினாமா செய்தார். இன்று பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுவார் என தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்' செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். பின் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினரும் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். 

இதனால் சீனிவாசன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. மொத்தமுள்ள 30 ("டை' ஏற்பட்டால், தலைவரின் ஒரு ஓட்டு தனி) உறுப்பினர்களில் 18 பேர், இவருக்கு எதிராக திரும்பியுள்ளதாக தெரிகிறது. 

ஆனால், மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டி(24 பேர்) இருந்தால் தான், சீனிவாசனை பதவியில் இருந்து நீக்க முடியும். இருப்பினும், எதிர்ப்பு அதிகரித்ததால், வேறுவழியின்றி வரும் 8ம் தேதி அவசர செயற்குழு கூட்டத்துக்கு சீனிவாசன் அழைப்பு விடுத்தார். 

அதேநேரம், இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.சி.சி.ஐ., பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் சஞ்சய் ஜக்டலே ராஜினாமா செய்தனர். செயற்குழுவை உடனடியாக கூட்டும்படி சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று மதியம் 2.30 மணிக்கு செயற்குழு கூடும் என, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அனுராக் தாகூரிடம், சீனிவாசன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இவர் பதவி விலகலாம்.

0 comments:

Post a Comment