கேப்டன் பதவியில் டோனி சாதனை



சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. 

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 20 ஓவராக குறைக்கப்பட்டது. 50 ஓவர் போட்டி 20 ஓவர் போட்டியாக மாறியது. 

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. வீராட் கோலி 34 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ரவிந்திர ஜடேஜா 25 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரவி போபரா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், பிராட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து விளையாடியது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து தொடக்கத்தில் சரிந்தது. 46 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது. 

5-வது விக்கெட்டான மார்கன்- போபரா ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. 18 பந்தில் அந்த அணிக்கு 28 ரன் தேவைப்பட்டது. இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவரில் தான் திருப்பு முனை ஏற்பட்டது. 

முதல் 2 பந்தில் 8 ரன் எடுத்தார். 3-வது பந்தில் மார்கனையும், 4-வது பந்தில் போபராவையும் அடுத்தடுத்து அவுட் ஆக்கினார். ஜடேஜா வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் (பட்லர், பிரெஸ்னென்) விழுந்தது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 15 ரன் தேவைப்பட்டது. 

அஸ்வின் கடைசி ஓவரில் 9 ரன்கள் கொடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. இதனால் 5 ரன்னில் வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 

மார்கன் 33 ரன்னும், போபரா 30 ரன்னும் எடுத்தனர். இஷாந்த்சர்மா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.12 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. ஜடேஜா ஆட்டநாயகன் விருதையும் தவான் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்கள். 

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ.2.40 கோடியும், 5 மற்றும் 6-வது இடங்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.60 லட்சமும் கிடைத்தன. 

7-வது மற்றும் கடைசி இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு பரிசு தொகை கிடையாது. மொத்தம் ரூ.24 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் கேப்டன் பதவியில் டோனி புதிய சாதனை படைத்தார். ஐ.சி.சி.யின் அனைத்து கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற மகத்தான சாதனையை டோனி படைத்தார். 

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் டோனி கைப்பற்றி இருந்தார். தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று உள்ளார். 

இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 5 ஆட்டத்தில் வென்று கோப்பையை வென்றது. ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சர்ச்சைக்கு பிறகு இந்திய அணி விளையாடிய முதல் போட்டித் தொடரிலேயே கோப்பையை வென்று பெருமை பட வைத்தது. இந்த பெருமை எல்லாம் கேப்டன் டோனிக்கு தான் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

0 comments:

Post a Comment