2015 உலக கோப்பைக்கு தோனி தான் கேப்டன்



இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்திய தோனி, வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கும் கேப்டனாக நீடிக்கலாம்,'' என, முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

சாம்பியன்ஸ் டிராபியை(மினி உலக கோப்பை)தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவரையும் முன்னாள் கேப்டன் கங்குலியையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். 

இது குறித்து கங்குலி கூறியது:

பொதுவாக ஜூன் மாதம் என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பல இனிய நினைவுகளை கொடுத்துள்ளது. 30 ஆண்டுக்கு முன் லார்ட்சில் இந்திய அணி, முதல் உலக கோப்பை கைப்பற்றியது. இதன் பின் இந்திய கிரிக்கெட்டின் முகம் மாறியது. 

இதன் பின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அசத்தியது. இதில் யார் சிறந்த கேப்டன் என்று பார்ப்பது தவறு. ஏனெனில், கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. இதில் கேப்டன்கள், வீரர்கள் வரலாம், போகலாம். ஆனால், சிறந்த வீரர்களை உருவாக்கினால் தான், நல்ல முடிவு கிடைக்கும்.


ஒப்பிட வேண்டாம்:

இந்நிலையில், தோனியுடன் என்னை ஒப்பிட்டு பேசுகின்றனர். இது ஏன் என்று தான் தெரியவில்லை. என்னை அவருடன் ஒப்பிட முடியும் என்றே நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதை நான் நம்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்திருக்கும். 

தோனியை பொறுத்தவரையில் சிறப்பான கேப்டன். தனது பணியில் வியக்கத்தக்க சாதனைகள் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளார். இன்னும் அவரிடம் ஏராளமான கிரிக்கெட் மீதமுள்ளது. 


பகட்டு இல்லாதவர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல தோனியும் இளம் வீரர்களை நன்கு ஊக்கப்படுத்தி வருகிறார். ரெய்னா, ஜடேஜா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தோனியால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான். 

இவரை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போலத் தெரியும். ஆனால், அவருக்குள் ஏராளமான நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். தேவையற்ற பரபரப்பு, பகட்டு இல்லாதவர். எது எப்படி இருப்பினும், இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளார்.


மீண்டும் கோப்பை:

வரும் 2015 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவரது முடிவு தான். இருப்பினும், இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணம், தோனியின் மனதில் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 

இன்னும் இளமையாக உள்ள இவர், அசத்தலான ஒருநாள் வீரர். இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக, தோனி இருக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. 

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment