வரலாறு படைப்பாரா தோனி



சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பை வெல்ல இந்திய அணி காத்திருக்கிறது. 

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில்(மினி உலக கோப்பை) பங்கேற்க, இந்திய அணி இங்கிலாந்து சென்றது. 

உள்ளூர் பிரச்னைகளில் இருந்து விரைவாக மீண்ட இந்திய அணியினர் வெற்றி மேல் வெற்றி பெற்றனர். லீக் சுற்றில் நூறு சதவீத வெற்யுடன், அரையிறுதிக்குள் நுழைந்தது. பின் அரையிறுதியில் இலங்கையை வென்று, பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றிகளுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மாவின் சிறப்பான துவக்கம் முக்கிய காரணம். "பவர்-பிளே' ஓவர்களில் (முதல் 10 ஓவர்) இதுவரை அவுட்டாகாத ஜோடி என்ற பெருமை பெற்றது. 

இதில் ஷிகர் தவான் இரண்டு சதம், ஒரு அரைசதத்துடன் மொத்தம் 332 ரன்கள் குவித்து (சராசரி 110.66) மிரட்டுகிறார். ரோகித் சர்மா தன்பங்கிற்கு 168 ரன்கள் (2 அரைசதம்) எடுத்துள்ளார். 


பின்வரிசை பலவீனம்:

இவர்கள் கொடுக்கும் நல்ல துவக்கத்தை, அடுத்து வரும் வீரர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக் இருவரும் நம்பிக்கை தருகின்றனர். அடுத்து ரெய்னா, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

அதேநேரம், இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் "டாப் ஆர்டர்' வீரர்களே விளையாடியதால், பின் வரிசை வீரர்களின் உண்மையான திறமை இத்தொடரில் சோதிக்கப்படாமல் உள்ளது பலவீனம் தான். 


ஜடேஜா நம்பிக்கை:

பவுலிங்கை பொறுத்தவரையில் இங்கிலாந்து மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றனர். துவக்கத்தில் களமிறங்கும் எதிரணியின் இடதுகை வீரர்களுக்கு புவனேஷ்வர் குமார் (6 விக்.,), "சிம்ம சொப்பனமாக' உள்ளார். 

இவரது அசத்தல் தொடரும் பட்சத்தில், துவக்கத்தில் வரும் கேப்டன் அலெஸ்டர் குக்கிற்கு சிக்கல் தான். 

அடுத்து இஷாந்த் சர்மா, இதுவரை 8 விக்கெட் வீழ்த்திய இவருடன், உமேஷ் யாதவும் கலக்குகிறார். சுழற்பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா (10 விக்.,) ரசிகர்களுக்கு நம்பிக்கை தருகிறார். இவருடன் அஷ்வினும் (6 விக்.,) சேர்ந்து, "இரட்டைக் குழல்' துப்பாக்கியாக தொல்லை தருகின்றனர்.


டிராட் மிரட்டல்:

சொந்த மண்ணில் நடந்த முக்கிய தொடர் ஒன்றில், இப்போது தான் இங்கிலாந்து அணி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அனுபவ வீரர் கெவின் பீட்டர்சன் இல்லாத நிலையிலும், குக், இயான் பெல் சீரான துவக்கம் தருகின்றனர். 

"மிடில் ஆர்டரில்' வரும் டிராட் (209 ரன்கள்), ஜோ ரூட் (166) இருவரும் அசத்தல் பார்மில் உள்ளனர். அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்களில், முதல் இரு இடத்தில் <உள்ள இவர்களை விரைவில் அவுட்டாக்குவது முக்கியம். பின்வரிசையில் அதிரடி மார்கன், அனுபவ ரவி போபரா, பட்லர் உள்ளனர்.


ஆண்டர்சன் பலம்:

வேகப்பந்து வீச்சில் "சுவிங்' செய்வதில் வல்லவரான ஆண்டர்சன் அசத்துகிறார். இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய இவரைத் தவிர, நல்ல உயரம் கொண்ட ஸ்டூவர்ட் பிராட்(6.5), ஸ்டீவன்(6.7) "வேகத்தில்' மிரட்டலாம்.

"சுழலில்' அனுபவ சுவான் பல்போன பாம்பாக உள்ளார். இவருக்குப் பதிலாக களமிறக்கப்படும் டிரட்வெல் இன்றும் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment