சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 10-வது லீக் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான இந்திய அணிதான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 

தென்ஆப்பிரிக்காவை 26 ரன்னிலும், வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இதன்மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணிதான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. 

இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி “ஹாட்ரிக்” வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியோடு ஷிகார் தவானின் ஒருநாள் ஹாட்ரிக் சதமும் நடக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 114 ரன்னும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 102 ரன்னும் எடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தலாம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தவான் தொடர்ந்து 3 சதம் அடித்து இருந்தார். மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தவான் 187 ரன் எடுத்தார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்துள்ளார். இது தவிர ரோகித்சர்மா, தினேஷ்கார்த்திக், வீராட் கோலி, கேப்டன் டோனி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். 

ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்தும் அணிக்கு பலத்தை ஏற்படுத்தி உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவர் 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற போராடும். இரு அணிகளும் கடைசியாக டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி மோதிய போட்டியில் இந்தியா 10 ரன்னில் வெற்றி பெற்றது. 

இரு அணிகளும் 124 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 49 ஆட்டத்திலும், பாகிஸ்தான் 71 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டம் முடிவு இல்லை. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்சன் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 


இரு அணி வீரர்கள் வருமாறு:- 

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட்கோலி, தினேஷ்கார்த்திக், ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முரளி விஜய், இர்பான்பதான், அமித் மிஸ்ரா, வினய்குமார். 

பாகிஸ்தான்: மிஸ்பா- உல்-ஹக் (கேப்டன்), இம்ரான்பர்கத், நாசிர் ஜாம்ஷெட், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், உமர் அமின், கமரன் அக்மல், வகாப் ரியாஸ், அஜ்மல், ஜூனைத்கான், முகமது இர்பான், அப்துர் ரகுமான், ஆசாத் சபீக், ஆசாத் அலி, அதில்.

0 comments:

Post a Comment