வரலாறு படைக்குமா இந்தியா?சாம்பியன்ஸ் டிராபி(மினி உலக கோப்பை) வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானை வென்றதில்லை. இந்தக் குறையை போக்க, இன்றைய பரபரப்பான லீக் போட்டியில் இந்திய கேப்டன் தோனி "தீயாக' செயல்பட்டு, வெற்றி வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இரு வெற்றியுடன் (தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்) அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

 இரு தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, கோப்பை வெல்லும் போட்டியில் இருந்து வெளியேறியது. 

இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியின் முடிவு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும், கிரிக்கெட் <உலகின் "பரம எதிரிகள்' மோதுவதால், மொத்தமுள்ள 25 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிவது உறுதி. 

இந்திய அணியின் பேட்டிங் எப்போதும் போல வலுவாக உள்ளது. இங்கு விளையாடிய நான்கு போட்டிகளில் (2 பயிற்சி) மூன்றில் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்தது. துவக்க வீரர் ஷிகர் தவான், அடுத்தடுத்து சதம் அடித்து "பார்மில்' உள்ளார். 

இவருக்கு இரு அரைசதம் அடித்த ரோகித் சர்மாவும் கைகொடுப்பதால், ரன்கள் எளிதாக வருகின்றன. இவர்களுடன் தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, கேப்டன் தோனி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர்.


ஜடேஜா நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா உள்ளனர். உமேஷ் யாதவுக்குப் பதில், பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் இர்பான் பதானை களமிறக்கினால் நல்லது. 

"சுழலில்' அஷ்வினுக்கு பெரும் உதவியாக உள்ளார் "சர்'ரவிந்திர ஜடேஜா. கடந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய இவர், இன்றும் தோனிக்கு உதவ காத்திருக்கிறார்.


மிஸ்பா அசத்தல்:

பாகிஸ்தான் அணிக்கு "பேட்டிங்' தான் பெரும் தொல்லை. முதல் இரு போட்டிகளில் 170 (வெஸ்ட் இண்டீஸ்), 167 (தென் ஆப்ரிக்கா) என, 200 ரன்களை எட்டவில்லை. கேப்டன் மிஸ்பா உல் ஹக் மட்டும், இரு அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். மற்றபடி, இம்ரான் பர்கத், ஹபீஸ், சோயப் மாலிக் என, யாரும் நீடிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்த நாசிர் ஜாம்ஷெத், எழுச்சி பெற முயற்சிக்கலாம்.


அஜ்மல் பலம்:

பவுலிங்கில் 7 அடி, ஒரு அங்குல உயரமுள்ள முகமது இர்பான், ஜுனைடு கான், வகாப் ரியாஸ் வேகத்தில் மிரட்டுவர். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் "அனுபவ' சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ் ஆகியோருடன் சோயப் மாலிக்கும் தொல்லை தருவார் எனத் தெரிகிறது.


போட்டி எப்படி:

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தானின் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக, இன்றைய போட்டி பார்க்கப்படுகிறது. இரண்டவதாக பவுலிங் செய்யும் அணிக்கு, வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடும் என்பதால், இன்று "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.யார் அதிகம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 124 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 49 ல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 71ல் வென்றது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை.


கடைசி வாய்ப்பு

 உலக கோப்பை (50 ஓவர், 5 முறை), "டுவென்டி-20' உலக கோப்பை (3 முறை) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரை(மினி உலக கோப்பை) பொறுத்தவரையில், 2004 (பர்மிங்காம்), 2009 (செஞ்சுரியன்) என, இரு முறை மோதிய போட்டியிலும், இந்திய அணி தோற்றுள்ளது. இது கடைசி தொடர் என்பதால், இந்த வாய்ப்பை இந்திய அணி "மிஸ்' பண்ணாமல் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்.


மழை வருமா

இன்று போட்டி நடக்கும் பர்மிங்காமில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர வாய்ப்பு குறைவு. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது எனத் தெரிகிறது. 


சாதிப்பாரா தவான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இம்முறை ஷிகர் தவான், தென் ஆப்ரிக்கா (114), வெஸ்ட் இண்டீசுக்கு (102) எதிராக தொடர்ந்து இரு சதம் விளாசினார். இன்று பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தினால், ஒருநாள் அரங்கில் "ஹாட்ரிக்' சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.

ஏற்கனவே, பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ், சயீத் அன்வர், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகிய நான்கு பேர் "ஹாட்ரிக்' சதம் அடித்துள்ளனர். 


ரசிகர்களுக்காக...

பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா கூறுகையில்,"" தொடரை விட்டு வெளியேறி விட்டோம் என்றாலும், உலக சாம்பியன் இந்தியாவுக்கு எதிராக வெல்வது என்பது, பெரிய ஆறுதலாக அமையும். இது பைனல் போல. எங்கள் திறமை நிரூபிக்க இது தான் கடைசி வாய்ப்பு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவர்,'' என்றார்.


சவாலான போட்டி: தோனி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" இது சவாலான போட்டி தான். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது பொருட்டல்ல. ஏனெனில், சர்வதேச அணி என்பது போதிய திறமையுடன் தான் இருக்கும். பாகிஸ்தான் என்பதால், கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். இப்போட்டியின் முடிவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தான் முயற்சிக்கும். இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment