புதிய வரலாறு படைக்குமா இந்தியா?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பார்படாசில் துவங்குகிறது. கடந்த 58 ஆண்டுகளாக பார்படாஸ் மண்ணில் இந்திய அணி வென்றதில்லை. இந்த சோகத்துக்கு தோனி தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைத்து, புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், இன்று பிரிஜ்டவுன் நகரிலுள்ள பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.

இங்கு கடந்த 1953 முதல் இந்திய அணி, 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த 1971ல் நடந்த போட்டியை மட்டும் "டிரா செய்தது. மற்றபடி, இரண்டு இன்னிங்ஸ் தோல்வி உட்பட, பங்கேற்ற அனைத்து போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

இதனால் தோனி தலைமையிலான வீரர்கள், வழக்கத்துக்கு மாறாக நீண்டநேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். பின் ஆடுகளம் குறித்து ஹர்பஜன் மற்றும் அணித் தேர்வாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆடுகளம், <உண்மையில் இந்திய பேட்ஸ்மேன்களின் திறமையை சோதிக்க காத்திருக்கிறது எனலாம்.

ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் இருவரும் ரன்சேர்க்க தடுமாறி வருகின்றனர். இங்கிலாந்து தொடருக்கான அணியை தேர்வு செய்யவுள்ள நேரத்தில், இந்த போட்டியில் ரன்குவிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


டிராவிட் நம்பிக்கை:

"மிடில் ஆர்டரில் வழக்கம் போல இந்திய "பெருஞ்சுவர் டிராவிட், அணியை காப்பாற்றலாம். கடந்த முறை ஏமாற்றிய லட்சுமணன், விராத் கோஹ்லி, கேப்டன் தோனி எழுச்சி பெற்றால் நல்லது. ரெய்னாவின் "பார்ம் பின்வரிசையில் ஹர்பஜன், அமித் மிஸ்ரா போன்றோர் பேட்டிங்கில் கைகொடுப்பது, நல்ல விஷயம் தான்.


பவுலிங் சாதகம்:

இந்த ஆடுகளத்தில் மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர், சார்லி கிரிவ்த் போன்றவர்கள் தங்களது வேகப்பந்து வீச்சு மூலம், பேட்ஸ்மேன்களின் முதுகு தண்டை சில்லிடச் செய்துள்ளனர். இதற்கேற்ப, இந்திய வீரர்கள் இஷாந்த் சர்மா, பிரவீண் குமாரும் தங்களது மிரட்டலை தொடர்ந்தால் நல்லது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், அமித்மிஸ்ரா நீக்கப்பட்டு முனாப் படேல் சேர்க்கப்படலாம். சுழலில் ஹர்பஜன் மட்டும் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.


எட்வர்ட்ஸ் சேர்ப்பு:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கெய்ல், மீண்டும் சேர்க்கப் படவில்லை. இதனால் சிம்மன்ஸ், பரத் ஜோடி தான் மறுபடியும் களமிறங்கும். "மிடில் ஆர்டரில் சீனியர்கள் சந்தர்பால், சர்வான், கேப்டன் சமி, டேரன் பிராவோ ஆகியோர் திறமை நிரூபிக்க வேண்டும். பிரண்டனுக்குப் பதில் இடம் பெற்ற கிர்க் எட்வர்ட்ஸ் நம்பிக்கை தருவாரா என, இன்று தெரியும்.


பிஷூ பலம்:

பவுலிங்கில் வழக்கம் போல பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால் இந்திய அணிக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். சுழலில் கடந்த போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய தேவேந்திர பிஷூ, வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
---

காத்திருக்கும் சாதனைகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, இரண்டாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் பலர் சாதிக்க காத்திருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்னும் 4 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், புதிய இலக்கை (400 விக்.,) எட்டவுள்ளார்.

* இதேபோல இஷாந்த் சர்மாவும் (96 விக்.,) 100வது விக்கெட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பேட்டிங்கில் லட்சுமண், இன்னும் 85 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் அரங்கில் 8000 ரன்கள் என்ற இலக்கை எட்டலாம்.

* கேப்டன் தோனி, 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட, 59 ரன்கள் தேவைப்படுகிறது.
---

மழை வரும்

இன்று போட்டி நடக்கும் ஓவல் மைதானம் அமைந்துள்ள பிரிஜ்டவுனில், முற்பகலில் இடியுடன் கூடிய மழை வருவதற்கு 30 சதவீத வாய்ப்பு உள்ளது. மதியம் லேசான மழையும், மாலை மீண்டும் இடியுடன் மழை வரவும் (40 சதவீதம்) வாய்ப்புள்ளது.
---

பவுலர்கள் கையில்

இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து, இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

இந்திய அணியில் சிறப்பான வீரர்கள் இடம் பெற்றிருப்பது, அவர்கள் 100 சதவீதம் திறமை வெளிப்படுத்துவது ஆகியவை உண்மையில் எனக்கு அதிர்ஷ்டம் தான். இந்நிலையில் அனைத்து போட்டியிலும் வெல்வது என்பது இயலாது. அதேநேரம் போட்டிகளுக்கு எப்போதும் சிறப்பாக தயாராகலாம், களத்திலும் சிறப்பாக செயல்படலாம்.

இன்றைய போட்டி நடக்கும் ஓவல் ஆடுகளத்தில், பந்துகள் அதிகமாக "பவுன்ஸ் ஆகும். இதற்கேற்ப, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பவுலிங் முறையில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதில் தான் அணியின் வெற்றி அடங்கியுள்ளது. பவுலிங்கில் இஷாந்த்தும், பிரவீண் குமாரும் வேறுபட்டவர்கள்.

அதிக டெஸ்டில் இஷாந்த் பங்கேற்றுள்ளதால், பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பந்து வீசுவார். ஆனால் பிரவீண் குமார், இரண்டு பக்கமும் "சுவிங் செய்வார். இதேபோல சுழலில் அசத்தி வரும் ஹர்பஜன், அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்தி தருவார். இப்போது பேட்டிங்கிலும் அசத்துகிறார்.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment