பலன் தந்த சீனியர்கள் ஆலோசனை

பேட்டிங்கின் போது, "ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்வது குறித்து, டிராவிட் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தந்த ஆலோசனை, நல்ல பலனை தந்தது,'' என, இந்திய வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரெய்னா, 82 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.


ரெய்னா கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுப்பது என்பது எளிதானதல்ல. களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும். எதிரணியினரின் திறமைக்கு மதிப்பு தரவேண்டும். பவுலர்களை எப்போதும் கண்காணிக்க வேண்டும். யார் பந்து வீசுகிறார், யார் பந்தை "சுவிங்' செய்கிறார், அந்த பந்துகளை எப்படி நகர்ந்து சென்று விளையாடுவது என திட்டமிட வேண்டும்.


சரியான திட்டமிடல்:

முதல் 15-20 பந்துகளில் ரன்கள் எடுக்கக் கூடாது. ஒருநாள் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் சரியாக ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் இந்த போட்டியில் அதிக ரன்கள் எடுக்க திட்டமிட்டு இருந்தேன்.


"சீனியர்கள்' ஆலோசனை:

தவிர, போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை, நேரடியாக அடித்து விளையாட திட்டமிட்டு இருந்தேன். "ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்வது குறித்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் கடினமாக பயிற்சிகள் செய்தேன்.

சீனியர் வீரர் டிராவிட், கேப்டன் தோனியிடமும் ஆலோசித்தேன். இதுபோன்று பந்துகள் வரும் போது, தலையை குனிந்து கொண்டு, விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட வேண்டும் என இவர்கள் அறிவுரை தந்தனர்.


மகிழ்ச்சியாக உள்ளது:

இப்போது மனது தெளிவாக உள்ளது. யார் பந்து வீசுகின்றார், எந்த இடத்தில் "பிட்ச்' ஆகிறது என்பதெல்லாம் கவலையில்லை. நல்லதையே நினைத்து நன்றாக பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். பின் வரிசையில் ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, பிரவீண் குமார் ஆகியோர் களத்தில் நிலைத்து பேட்டிங் செய்வர் என எனக்குத் தெரியும்.

இவர்களுடன் நானும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முடிவுசெய்தேன். இந்த ஆடுகளத்தில் புதிய பந்தில், பவுலிங் நன்றாக எடுபடுகிறது. துவக்கத்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், அப்புறம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல் தான்.

இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment