தேவையா டி.ஆர்.எஸ்., முறை

தற்போதைய டி.ஆர்.எஸ்., முறை நம்பிக்கை இல்லாதது. இதுகுறித்த தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை,'' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உறுதியாக தெரிவித்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை கொண்டு வரப்பட்டது. இதை துவக்கத்தில் இருந்தே பி.சி.சி.ஐ., எதிர்த்து வருகிறது. இந்திய அணி கேப்டன் தோனியும் இதை எதிர்த்து வருகிறார்.

ஆனால், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன், சேவக் ஆகியோர் டி.ஆர்.எஸ்., முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இதுகுறித்து கூறுகையில்,"" இதில் "ஸ்னிக்கோ மீட்டர்', "ஹாட் ஸ்பாட்' உதவிகளையும் சேர்த்து, தீர்ப்பு வழங்கினால் இன்னும் துல்லியமாக இருக்கும்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு காரணமாக, நாளை துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடர், எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் இம்முறை பயன்படுத்தப்படவில்லை. இதற்கு இங்கிலாந்தின் சுவான், ஆண்டர்சன், டிரம்லெட் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை:

டி.ஆர்.எஸ்., குறித்து சில நாட்களாக "மீடியா' அதிகமாக விமர்சித்து வருகிறது. இருப்பினும் இந்த முறையை பொறுத்தவரையில் பி.சி.சி.ஐ., நிலையில் உறுதியாக உள்ளது. ஏனெனில், தற்போதைய தொழில்நுட்ப முறையில், பந்து செல்லும் பாதையை கணக்கிடுவதில் துல்லியம் இல்லை.


நம்பகமில்லாமல் இருக்கும் இந்த முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் எங்களது நிலையில் மாற்றம் இல்லை என்பதை உறுதியாக கூறுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அம்பயர் எதிர்ப்பு:

ஐ.சி.சி., முன்னாள் அம்பயர் வெங்கட்ராகவன் (இந்தியா) கூறுகையில்,"" தொழில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால், 100 சதவீதம் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். பந்து செல்வதை கணக்கிடுவதில், கடந்த உலக கோப்பை தொடரில் குழப்பம் ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரையில், டி.ஆர்.எஸ்., முறையை எதிர்க்கிறேன்,'' என்றார்.

---

பி.சி.சி.ஐ., எதிர்த்த போதிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகள், இம்முறைக்கு துவக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகின்றன.

0 comments:

Post a Comment