இந்திய வீரர்களுக்கு அதிரடி தடை

இலங்கை பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க அஷ்வின், இர்பான் பதான், முனாப் படேல் உள்ளிட்ட 12 இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., அதிரடியாக தடை விதித்துள்ளது.

இலங்கையில் வரும் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை இலங்கை பிரிமியர் லீக்(எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் நடக்க உள்ளது. இதில், கெய்ல்(வெ.இண்டீஸ்), அப்ரிதி(பாக்,,), வெட்டோரி(நியூசி.,) போன்ற வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் அஷ்வின், தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், முனாப் படேல், சவுரப் திவாரி உள்ளிட்ட 12 வீரர்கள் பங்கேற்க இருந்தனர். இவர்களுக்கு முதலில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அனுமதி வழங்கியது. ஆனால், நேற்று திடீரென அனுமதி மறுத்தது. தனியார் நிறுவனம் நடத்தும் தொடர் என்பதால் இத்ததைய முடிவு மேற்கொள்ளப்பட்டதாம்.

இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் கூறுகையில்,""தனியார் நிறுவனம் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பது இல்லை. இதன்படி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று நடத்த உள்ள எஸ்.எல்.பி.எல்., தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இத்தொடரை இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்துகிறது என நினைத்து தான் முதலில் அனுமதி தரப்பட்டது. இது பற்றி இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு தெரிவித்து விட்டோம். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.பி.எல்., தொடருக்கு இலங்கை தரப்பில் இருந்து தடை விதிக்கப்படும் என நினைக்கவில்லை,''என்றார்.


மீண்டும் மோதல்:

சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் பாதியில், தனது வீரர்களை திரும்ப அழைத்து இலங்கை நெருக்கடி கொடுத்தது. இதன் காரணமாகவே தற்போது பி.சி.சி.ஐ., அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இலங்கை மறுப்பு

பி.சி.சி.ஐ., புகாரை இலங்கை கிரிக்கெட் போர்டு மறுத்தது. இதன் செயலர் நிஷாந்தா ரணதுங்கா கூறுகையில்,"" எஸ்.எல்.பி.எல்., தொடருக்கு இலங்கை கிரிக்கெட் போர்டு அங்கீகாரம் அளித்துள்ளது. இத்தொடருக்கான உரிமையாளர் நாங்கள் தான்.

"டெண்டர்' மூலம் மார்க்கெட்டிங் உரிமையை மட்டுமே சிங்கப்பூரை சேர்ந்த சாமர்சட் நிறுவனம் பெற்றது. இதன் அடிப்படையில் சாமர்சட் தான் உரிமையாளர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., முடிவு வியப்பும் வேதனையும் அளிக்கிறது.

இது குறித்து அவர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். இத்தொடரில் இந்திய வீரர்கள் இடம் பெறுவது மிகவும் முக்கியம்,''என்றார்.

0 comments:

Post a Comment