பி.சி.சி.ஐ., ஆதிக்கத்தில் ஐ.சி.சி

ஐ.பி.எல்., மூலம் சர்வதேச கிரிக்கெட்டை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அழித்து வருகிறது. இந்த ஆதிக்கத்தை தடுக்க முடியாமல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பல் இல்லாத புலி போல் வலிமை இழந்து காணப்படுகிறது,'' என, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அணிக்காக 1996ல் உலககோப்பை பெற்றுத் தந்தவர் கேப்டன் ரணதுங்கா. கிரிக்கெட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து இவர் கூறியது:

ஐ.சி.சி.,யின் வேலை, கிரிக்கெட்டை பாதுகாப்பது தான். எந்த ஒரு நாட்டிற்கும் சாதகமாக செயல்படுவது அல்ல. ஐ.சி.சி., யின் உதவியில், நீண்ட காலமாக கிரிக்கெட் நேர்மையாக இருந்தது. தற்போது பி.சி.சி.ஐ.,யின் ஆதிக்கத்தின் கீழ் ஐ.சி.சி., செயல்படுகிறது.

மால்கம் ஸ்பீடு, ஈசான் மானி, மால்கம் கிரே போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக உறுதியாக செயல்பட்டார்கள். தற்போதுள்ள ஐ.சி.சி., நிர்வாகம் பலவீனம் அடைந்துள்ளது.

சுருக்கமாக சொன்னால் பல் இல்லாத புலி போன்று உள்ளது. இன்றைய நிலையில் பி.சி.சி.ஐ.,யை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். யாரும் எதிர்க்க முன்வருவதில்லை. இலங்கை கிரிக்கெட்டும் பி.சி.சி.ஐ.,யின் கைப்பாவையாக உள்ளது.

ஐ.பி.எல்., முதன் முதலாக வந்தபோது, இது சர்வதேச கிரிக்கெட்டை அழித்துவிடும் என்று கூறினேன். இதனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் உலககோப்பை தொடரின் மீதான ஆர்வம் குறைய துவங்கும்.

இதனை தட்டி கேட்கும் பொறுப்பு ஐ.சி.சி.,யிடம் உள்ளது. ஐ.சி.சி., உயர்மட்ட குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இருப்பதால், சரியான முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு ரணதுங்கா கூறினார்.

0 comments:

Post a Comment