தென் ஆப்ரிக்கா மீண்டும் நம்பர் 1

பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது.

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8/229 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. 

இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 369 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை அவ்வப்போது வந்து தொல்லை தந்தது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (13) ஏமாற்றினார். 

ஹெராத் வலையில் குயின்டன் (37), டிவிலியர்ஸ் (12) சிக்கினர்.  திருவான் பெரேரா சுழற்பந்துவீச்சில் கேப்டன் ஆம்லா (25), டுமினி (3) அவுட்டாகினர். ஸ்டைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து தவிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது.

கடைசி ஒரு மணி நேரத்தில் எஞ்சிய இரு விக்கெட்டை கைப்பற்ற, இலங்கை அணி மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. துாணாக நின்ற பிலாண்டர் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, போட்டியை ‘டிரா’ செய்தது. 


21 ஆண்டுக்குப்பின்:

சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி(124 புள்ளிகள்), டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தையும் பிடித்தது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா(123), பாகிஸ்தான் (103) அணிகள் உள்ளன. இந்திய அணி 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

0 comments:

Post a Comment