28 ஆண்டுகளுக்கு பிறகு பெல்ஜியம் அணி கால் இறுதிக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி 2–வது சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது.

இதில் ‘எச்’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெல்ஜியம் ‘ஜி’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்த அமெரிக்கா அணிகள் மோதின.

இரு அணி வீரர்களுமே கால் இறுதியில் நுழைய வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

பெல்ஜியம், அமெரிக்க வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை அமெரிக்க கோல்கீப்பர் டிம்ஹவார்டு பலமுறை தகர்த்தார். இதேபோல பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்ட்டசின் செயல்பாடும் நன்றாக இருந்தது.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2–வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை நீடித்தது.

ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0–0 என்ற நிலை இருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய கூடுதல் நேரமான 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் ஆட்டம் தொடங்கிய 3–வது நிமிடத்திலேயே பெல்ஜியம் கோல் அடித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 93–வது நிமிடத்தில் கெவின்டி புருனே இந்த கோலை அடித்தார்.

ரோமலு ஹாகு தட்டி கொடுத்த பந்தை அமெரிக்கா பின்கள வீரர்கள் 3 பேர் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி இந்த கோலை அவர் அருமையாக அடித்தார்.

தொடர்ந்து பெல்ஜியம் கையே ஓங்கி இருந்தது. 105–வது நிமிடத்தில் அந்த அணி 2–வது கோலை அடித்து அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த முறை புருனே தட்டி கொடுத்த பந்தை ஹாகு கோலாக்கினார். இதன்மூலம் பெல்ஜியம் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் அமெரிக்க அணி ஆவேசத்துடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அடுத்த 2–வது நிமிடத்தில் அந்த அணி கோல் அடித்தது. 107–வது நிமிடத்தில் மாற்று வீரரான ஜூலியன் கிரீன் இந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2–வது கோலை அடித்து சமன் செய்ய அமெரிக்க ஆட்டத்தின் இறுதி வரை போராடியது. ஆனால் முடியவில்லை. இறுதியில் பெல்ஜியம் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தது.

அமெரிக்கா போராடி இந்த தோல்வியை அடைந்தது. அந்த அணி தொடர்ந்து 3–வது முறையாக 2–வது சுற்றில் தோற்று வெளியேற்றப்பட்டது.

பெல்ஜியம் அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதியில் நுழைந்துள்ளது. கடைசியாக 1986–ம் ஆண்டு உலக கோப்பையில் 4–வது இடத்தை பிடித்து இருந்தது.

அதன்பிறகு 3 உலக கோப்பையில் 2–வது சுற்று வரையே வந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதியில் முன்னேற்றம் கண்டுள்ளது. பெல்ஜியம் கால்இறுதியில் அர்ஜென்டினாவை எதிர் கொள்கிறது.

1986 உலக கோப்பை அரை இறுதியில் இந்த இரு அணிகளும் மோதி இருந்தன. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இருந்தது.

0 comments:

Post a Comment