பவுலர்கள் கையில் வெற்றி - டிராவிட் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பவுலர்களின் செயல்பாட்டை பொறுத்து, இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும்,’’ என, முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.      

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் ஜூலை 9ம் தேதி துவங்குகிறது.      

இத்தொடர் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் டிராவிட் கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வெற்றி பவுலர்கள் கையில் தான் உள்ளது. 

இவர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு தான் வெற்றி கிடைக்கும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் 20 விக்கெட்டை கைப்பற்றும் தகுதி இந்திய பவுர்களிடம் இருக்கும் பட்சத்தில், டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றலாம்.      

கடந்த 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–0 என வென்ற போது ஜாகிர் கான் (18 விக்கெட்) ‘வேகத்தில்’ அசத்தினார். ‘சுழலில்’ அனில் கும்ளே (12 விக்கெட்) கைகொடுத்தார். 

இவர்களுக்கு சக பவுலர்களும் ஒத்துழைப்பு தந்ததால் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து தொடரை வெல்ல முடிந்தது. இத்தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பந்தை ‘சுவிங்’ செய்து வீசியது சாதகமாக அமைந்தது. இதேபோல இம்முறை இந்திய வேகங்கள் பந்தை ‘சுவிங்’ செய்து வீச முயற்சிக்க வேண்டும்.      

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். 

இந்தியா ‘ஏ’ மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடரில் பங்கேற்ற சில வீரர்கள், இந்த அனுபவத்தை கொண்டு சிறப்பாக விளையாடலாம். இத்தொடர், இளம் இந்திய வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும். இதன்மூலம் அடுத்து வரும் தொடர்களில் சாதிக்க முயற்சிக்கலாம்.    
  
இந்திய அணியின் ஆலோசகராவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்து, தீர்மானிக்கப்படும்.      

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment