கேப்டனுக்கு பொருத்தமானவர் தோனி - சாப்பலுக்கு டிராவிட் பதிலடி

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தோனி தான் பொருத்தமானவர். விராத் கோஹ்லி கேப்டனாக சரியான நேரம் வரவில்லை,’’ என, டிராவிட் தெரிவித்தார்.     

கடந்த 2011 முதல் அன்னிய மண்ணில் பங்கேற்ற 12 டெஸ்டில் 10ல் தோற்ற இந்திய அணி, 2 போட்டிகளை ‘டிரா’ செய்தது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் டெஸ்டை ‘டிரா’ செய்தது.       

இதனால், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோஹ்லியை நியமிக்க வேண்டும் என, ‘சிண்டு முடியும்’ வேலை பார்த்தார் ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:      

இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல தோனி தான் சரியான கேப்டன். கடந்த 2011–12ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் அடைந்த தோல்விகளுக்காக இவரை, எல்லோரும் குற்றம் சுமத்துகின்றனர். 

ஆனால், இப்போதைய நிலையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை வைத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுகிறார். 

விராத் கோஹ்லியை பொறுத்தவரையில், கேப்டன் பதவி ஏற்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஸ்டூவர்ட் பின்னி போதியளவு பவுலிங் செய்யவில்லை என்கின்றனர். 

ஆனால், இவரது ஸ்டைலுக்கு ஏற்ற ஆடுகளம் அமையவில்லை என்பது தான் உண்மை. லார்ட்ஸ் டெஸ்டில் இவருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.      

இந்த ஆடுகளம், நாட்டிங்காமை விட சற்று வித்தியாசமானது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுக்கும். 

சமீபத்திய ஜடேஜாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது, இவர் இல்லாமல் களமிறங்குவது என்பது சிரமம் தான். இருப்பினும், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.       

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment