வேகத்தில் சாதிக்க தயார்

உலக கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், காயத்திலிருந்து மீண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடருக்காக முழு அளவில் தயாராகியுள்ளார்.

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார். உலககோப்பை அணியில் இடம் பெற்றிருந்த இவர், முழங்கை காயம் காரணமாக கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த இவர், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்ட இவர், பங்கேற்ற முதல் போட்டியின் முதல் பந்திலேயே, புனே அணியின் ஸ்மித்தை அவுட்டாக்கினார். அடுத்து சென்னைக்கு எதிரான போட்டியில் முதல் இரண்டு பந்தில், இரண்டு விக்கெட் வீழ்த்தி தனது திறமை நிரூபித்துள்ளார்.

இதுகுறித்து பிரவீண் குமார் அளித்த பேட்டி:


* உங்களது காயம் எப்படி உள்ளது?

எனது காயம் முற்றிலும் குணமடைந்து, போட்டிகளுக்கு முழுமையாக தயாராகியுள்ளேன். இதற்காக பெங்களூருவில் <உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக நேரம் செலவு செய்துள்ளேன். இதனால் தற்போது 100 சதவீதம் மீண்டுள்ளேன்.


* உலக கோப்பை தொடரில் பங்கேற்காததால், ஐ.பி.எல்., தொடரில் அசத்துவீர்களா?

உலக கோப்பை தொடர் முடிந்துவிட்டது. இப்போது ஐ.பி.எல்., தொடர் வந்துள்ளது, அவ்வளவு தான். இதற்காக வேறு எதையும் நினைத்துக்கொண்டு, எனக்கு நானே நெருக்கடி கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை.


* உலக கோப்பை அணியில் இல்லாதது எந்தளவுக்கு வருத்தமாக இருந்தது?

காயங்கள் ஏற்படுவது விளையாட்டின் ஒரு பகுதி தான். இருந்தாலும், உலக கோப்பை தொடரில் விளையாட முடியாதது மிகுந்த ஏமாற்றம் தான். ஆனால் இதற்காக அதிகம் வருந்தவில்லை. இனி அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்துவேன்.


* இந்திய அணி உலககோப்பை வென்ற போது எப்படி உணர்ந்தீர்கள்?

தொடரில் பங்கேற்காதது, அணியில் நான் இல்லாமல் இருந்தது என பல ஏமாற்றம் இருந்தாலும், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.


* இதை எப்படி கொண்டாடினீர்கள்?

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டது, நமது கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமான நாள். இதை மகிழ்ச்சியுடன் கொண்டாட இன்னும் அதிக நாட்கள் உள்ளது. அதாவது அடுத்த உலக கோப்பை தொடர் வரை நேரம் உள்ளது. இதனால், இப்போது இதைக் கொண்டாடுவது குறித்து இதுவரையிலும் முடிவு செய்யவில்லை.

0 comments:

Post a Comment