போலி உலக கோப்பையா? ஐ.சி.சி., விளக்கம்

உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமில்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள்ளது.

பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டது என்பதும் தகவல் வெளியாகி உள்ளன.


பிடிபட்டது எது?

கோப்பையின் மதிப்பில் 35 சதவீதம் (ரூ. 22 லட்சம்) வரி செலுத்தினால் தான், கோப்பையை திருப்பி தருவோம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை ஐ.சி.சி., செலுத்தாததால் கோப்பை அவர்களிடமே இருந்தது. பைனலில் இந்திய அணி வெற்றி பெற்றதும், அங்கிருந்த மாதிரி உலக கோப்பையைத் தான், ஐ.சி.சி., தலைவர் சரத்பவார், இந்திய அணிக்கு பரிசாக வழங்கினார்.

36 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது தான் முதன்முறை என்றும் தகவல்கள் பரவின. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஐ.சி.சி., மறுப்பு:

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:

மீடியாக்கள் தான் வேண்டுமென்றே, தேவையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. 2011ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது. அது மாதிரி (டூப்ளிகேட்) என்ற பேச்சிற்கே இடமில்லை. இக்கோப்பையில் பத்தாவது உலக கோப்பை தொடரின் லோகோ இடம் பெற்றுள்ளது.

தொடரை பிரபலப்படுத்துவதற்காக பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பை தான் சுங்கத்துறையிடம் பிடிபட்டது. இக்கோப்பையில் தொடரின் லோகோவை விட, சிறிய ஐ.சி.சி., லோகோ இடம் பெற்றிருக்கும். சுங்கத்துறையிடம் பிடிபட்ட கோப்பையை, மீண்டும் துபாய் கொண்டு வர, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

மும்பை சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" எங்களிடம் இருக்கும் கோப்பை உண்மையானதா, போலியானதா என தெரியாது. 35 சதவீத வரியை செலுத்தினால் திருப்பிக்கொடுத்து விடுவோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment