15 சிக்ஸர்கள் வாட்சன் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் அதிகபட்சமாக ஒருநாள் ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அவர் கனடாவுக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்தார்.


மார்ஷலின் சாதனையை மிர்பூரில் திங்கள்கிழமை வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வாட்சன் முறியடித்தார். இது தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையும் வாட்சன் படைத்தார். இதற்கு முன் மேத்யூ ஹேடன் நியூசிலாந்துக்கு எதிராக 2007-ம் ஆண்டில் 181 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


ஒருநாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். சச்சின் 200 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

சாதனை ஆட்டம்!


இந்த ஒருநாள் ஆட்டத்தை வாட்சனின் சாதனை ஆட்டம் என்று கூறுவது கூடப் பொருந்தும். ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் என்ற சாதனையுடன் இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார் வாட்சன்.


* ஆஸ்திரேலிய அணியில் ஒருநாள் ஆட்டத்தில் அதிபட்ச ரன் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் 3-வது இடத்தைப் பிடித்தார்.


* வாட்சன் குவித்த 185 ரன்களில் 150 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகள் மூலமே எடுக்கப்பட்டன. இதுவும் ஒரு சாதனைதான். இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ் ஒருநாள் ஆட்டத்தில் 126 ரன்களை சிக்ஸர், பவுண்டரிகள் மூலம் எடுத்திருந்தார்.


* இரண்டாவதாக பேட் செய்த அணியில் அதிகபட்ச ரன் (185*) எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் தோனி, இலங்கைக்கு எதிராக 183* ரன்கள் எடுத்திருந்ததே இரண்டாவதாக பேட் செய்த அணியின் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


* வாட்சன் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் இரண்டாவதாக பேட் செய்த போது எடுக்கப்பட்டவை. முதல் இன்னிங்ஸில் வாட்சனின் சராசரி 32.81, இரண்டாவது இன்னிங்ஸில் அவரது சராசரி 64.30.


* இந்த ஆட்டத்தில் வாட்சன் தான் எதிர்கொண்ட 3.2 பந்துகளில் (சராசரியாக) ஒன்றை பவுண்டரிக்கோ அல்லது சிக்ஸருக்கோ விரட்டியுள்ளார். இதற்கு முன் சேவாக் இதில் சாதனை படைத்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 70 பந்துகளில் சதமடித்த அவர், சராசரியாக 3.5 பந்துகளில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸரை எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment