இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.


இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக இழந்த பார்மை மீட்டு வந்தனர். இத்தொடரின் சில போட்டிகளில், கடைசிநேரத்தில் தான் வெற்றி பெற்றோம். இது இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைய, அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடந்த மொகாலி ஆடுகளம், எப்போதும் வேகத்துக்கு தான் ஒத்துழைக்கும். இதனால் தான் அஷ்வினை சேர்க்காமல் ஆஷிஸ் நெஹ்ராவை களமிறக்கினேன். ஆனால் எனது கணிப்பு தவறாகிவிட்டது. இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக சுழலுக்கு நன்கு உதவ, ஹர்பஜனும், யுவராஜ் சிங்கும் அசத்தி, நெருக்கடி கொடுத்தனர்.

தற்போது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். நாம் கோப்பை வெல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் போது, எந்த ஒரு வீரரையும் யாரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சரியான நேரத்தில் எழுச்சி பெறுவோம் என இத்தொடரின் துவக்கத்தில் கூறினேன். அதுபோல ஒவ்வொரு போட்டியிலும் போராடி வென்று வந்துள்ளோம். இது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, இலக்குகளை "சேஸ்' செய்வது உட்பட, அனைத்து பிரிவுகளிலும் அணியின் திறமையை சோதித்து பார்த்துவிட்டோம். தற்போது பைனலுக்கு தயாராகியுள்ளோம்.

பைனல் போட்டி குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன. இந்த செய்திகளில் நமது கவனத்தை சிதறச்செய்து விடக்கூடாது. ஏனெனில் எல்லோரும் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்கள், அதனால் பைனலில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருபவர்கள் இலங்கை அணியினர். இவர்களுக்கு எதிரான பைனலில், நம்மால் முடிந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், இலங்கை அணியை வீழ்த்த முடியும்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment