முதல் டெஸ்டில் களமிறங்குவாரா தோனி?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில், தோனி  பங்கேற்க வாய்ப்புள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது.

கைவிரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். இருப்பினும்,  இவர் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் கூறியது:

தோனி, கோஹ்லி இருவரும் களத்தில் தீவிரமாக செயல்படக் கூடியவர்கள் தான். இவர்கள்  தலைமையில் விளையாடுவது நன்றாக இருக்கும். அதேநேரம், தோனி தற்போது களமிறங்கும்  நிலையில், டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க, கோஹ்லி இன்னும் சற்று காலம் காத்திருக்க  வேண்டும்.

வரும் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஜான்சன், பெரும் சவாலாக இருப்பார். உலகின்  சிறந்த பவுலர்களில் ஒருவரான இவர், சரியாக வேகத்தில் துல்லியமாக வீசுவார்.

இருப்பினும், இந்திய மண்ணில் ஐ.பி.எல்., மற்றும் பல்வேறு சர்வதேச தொடரில் ஜான்சன் பவுலிங்கை  எதிர்கொண்டுள்ளேன். இப்போது தான் முதன் முறையாக இங்கு சந்திக்கவுள்ளேன். இதில் சிறப்பாக  விளையாட முடியும் என்று நம்புகிறேன்.

தவிர, துவக்க வீரராக இருப்பவர், போராட்ட குணத்தை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். இது  ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்ல, பொதுவாக கிரிக்கெட்டில் அப்படித் தான் இருக்க வேண்டும்.  ஏனெனில், இது ஒட்டுமொத்த அணிக்கும் நன்மையாக அமையும்.

ஆஸ்திரேலிய உலகின் சிறந்த டெஸ்ட் அணி. இவர்களுக்கு எதிராக அதிக ரன்கள் எடுப்பது  எப்போதும் மகிழ்ச்சி தான். இதனால், வரும் டெஸ்ட் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி  உள்ளோம்.

எனது பேட்டிங் சொதப்பல்களில் இருந்து நிறைய கற்றுள்ளேன். இது தான் என்னை சிறந்த வீரராக  மாற்றியுள்ளது. தொடர்ந்து எனது பேட்டிங் ‘ஸ்டைலில்’ மாற்றம் செய்துள்ளேன்.

இந்திய ‘ஏ’ அணிக்காகவும், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான தொடருக்காகவும் என, பல  முறை இங்கு வந்துள்ளேன். இந்திய அணிக்காக விளையாடவுள்ளது இது தான் முதன் முறை.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

0 comments:

Post a Comment