விராத் கோஹ்லி ரேங்கிங்கில் முன்னேற்றம்

ஐ.சி.சி., டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்தியாவின் விராத் கோஹ்லி 16வது இடத்துக்கு முன்னேறினார்.      
            
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 27வது இடத்தில் இருந்து 16வது இடத்துக்கு முன்னேறினார். இவர், அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் (115, 141) அடித்தது முன்னேற்றத்துக்கு காரணம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி, 26வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன், 27வது இடம் பிடித்தார்.            

மற்றொரு இந்திய வீரர் புஜாரா, 17வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய அணிக்கு சிறந்த துவக்கம் கொடுத்த தமிழக வீரர் முரளி விஜய் (53, 99), 8 இடங்கள் முன்னேறி 28வது இடம் பிடித்தார்.          
  
வார்னர் முன்னேற்றம்: இரண்டு இன்னிங்சிலும் சதம் (145, 102) அடித்த ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர், முதன்முறையாக 4வது இடத்தை கைப்பற்றினார். 

இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (162*, 52* ரன்), முதன்முறையாக 8வது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 12வது இடம் பிடித்தார்.            

இஷாந்த் பின்னடைவு: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் இஷாந்த் சர்மா 21வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ‘சுழலில்’ அசத்தி, ஆட்ட நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் 19வது இடத்தை கைப்பற்றினார். 

மிட்சல் ஜான்சன் (3வது இடம்), ரியான் ஹாரிஸ் (4வது) ‘டாப்–5’ வரிசையில் உள்ளனர். ‘டாப்–10’ பட்டியலில் ஒரு இந்திய பவுலர் கூட இடம் பெறவில்லை. அடிலெய்டு டெஸ்டில் விளையாடாத அஷ்வின் 13வது, பிரக்யான் ஓஜா 14வது இடங்களில் உள்ளனர்.

0 comments:

Post a Comment