ரசிகர் கன்னத்தில் யூசுப் பதான் பளார்

தகாத வார்த்தைகள் பேசிய ரசிகரை, கன்னத்தில் அறைந்து சர்ச்சை கிளப்பியுள்ளார் யூசுப் பதான்.       

காஷ்மீர், பரோடா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி, வதோதராவில் நடந்தது. இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பரோடா அணியின் யூசுப் பதான், 9 ரன்னுக்கு அவுட்டாகி திரும்பினார்.       

காலரியில் இருந்த ஆஷிஸ் பார்மர் என்ற ரசிகர் யூசுப் குறித்து, தகாத முறையில் பேசியுள்ளார். இதை பொறுத்துக் கொள்ளாத யூசுப், அவரை ‘டிரசிங் ரூம்’ வருமாறு அழைத்துள்ளார். 

அங்கு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். கோபம் குறையாத யூசுப், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.       

மீண்டும் ஆவேசம்: இதைக் கேள்விப்பட்ட இவரது சகோதரர் இர்பான் பதான் தலையிட்டு சமாதானம் செய்துள்ளார். யூசுப் செயலால் ஆத்திரப்பட்ட 30க்கும் மேற்பட்ட ரசிகர்கள், ‘டிரஸ்சிங் ரூம்’ செல்வதற்காக, அங்கிருந்த கதவை உடைக்க முயற்சித்தனர்.       

இதைக் கண்டு அஞ்சாத யூசுப், வெளியில் வந்து தைரியமாக நின்றார். அப்போது தடுப்புகளை தாண்டிக் குதித்த ரசிகர்கள் மோதலுக்கு தயாராகினர்.       
கடைசியில் சமாதானம்: கடைசியில் பரோட கிரிக்கெட் சங்கத்தினர் (பி.சி.ஏ.,) தலையிட்டு சமாதானம் செய்தனர்.   
   
பி.சி.ஏ., செயலர் கெய்க்வாட் கூறுகையில்,‘‘ சம்பந்தப்பட்ட ரசிகரின் செயலுக்காக, அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டனர். இதனால், பிரச்னை சுமூகமாக முடிந்தது,’’ என்றார்.

0 comments:

Post a Comment