மழையால் வந்த தொல்லை - உலக கோப்பைக்கு இன்னும் 54 நாட்கள்

வண்ண உடையில் வீரர்கள், வெள்ளை நிற பந்து, ஒளிவெள்ளத்தில் பகலிரவு போட்டிகள் என  பல்வேறு புதுமைகளுடன் 5வது உலக கோப்பை தொடர் 1992ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. 

நிறவெறி காரணமாக 21 ஆண்டுகள் தடையில் இருந்து மீண்ட தென் ஆப்ரிக்க அணி, இத்தொடரில் பங்கேற்றது. மொத்தம் 9 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் ‘ரவுண்ட்–-ராபின்' முறையில் நடத்தப்பட்டன.      
                   
இந்திய அணி 8 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்ததால், புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பெற்றது. இதனால், லீக் சுற்றுடன் நடையை கட்டியது. நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணியும் லீக் சுற்றை கடக்க முடியவில்லை.             
           
இம்ரான் பலம்: பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த நேரத்தில் கேப்டன் இம்ரான் கான் சக வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். 

முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது.

வினோத விதிமுறை: இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதி பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், மழை குறுக்கிட சிக்கல் ஏற்பட்டது. 

அப்போதைய விதிமுறைப்படி எதிரணி அதிக ரன்கள் எடுத்த ஓவர்களின் அடிப்படையில், வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும். 

இதன்படி 1 பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டுமென தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டது. இது, சிட்னி மைதானத்தின்  ‘மெகா ஸ்கிரீனில்’ 1 பந்தில் 22 ரன்கள் என தவறாக காண்பிக்கப்பட்டது. 

இந்த எட்ட முடியாத இலக்கு காரணமாக 43 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா பரிதாபமாக தோல்வி அடைந்தது.   

                      
அக்ரம் அபாரம்: 

மெல்போர்னில் நடந்த பைனலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் இம்ரான் கான்(72), மியான்தத்(58), இன்சமாம்(42), அக்ரம்(33) கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அக்ரம் ‘வேகத்தில்’ திணறியது. 49.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, முதல் முறையாக கோப்பை வென்றது.


நியூசி., தந்த அதிர்ச்சி              
         
பொதுவாக ஒருநாள் போட்டிகளில் துவக்க ஓவர்களை வேகப்பந்துவீச்சாளார்கள் வீசுவர். இந்த நடைமுறையை மாற்றிக் காட்டினார் நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ். 

கடந்த 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில் துவக்கத்தில் சுழற்பந்துவீச்சாளர் தீபக் படேலை களமிறக்கி, எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.

0 comments:

Post a Comment