அடிலெய்டு டெஸ்ட் - இந்தியா தோல்வி - கோஹ்லி சதம் வீண்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய கேப்டன் விராத் கோஹ்லியின் சதம் வீணானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 517/7 (டிக்ளேர்), இந்தியா 444 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (9) மீண்டும் ஏமாற்றினார். 

அடுத்து வந்த புஜாரா (21), நாதன் லியான் ‘சுழலில்’ சிக்கினார். பின் இணைந்த முரளி விஜய், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி நிதானமாக விளையாடியது. அபாரமாக ஆடிய கேப்டன் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். 

மூன்றாவது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்த போது நாதன் லியான் சுழலில் முரளி விஜய் (99) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த ரகானே ‘டக்–அவுட்’ ஆனார். 

அடுத்து வந்த ரோகித் சர்மா (6), விரிதிமன் சகா (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கோஹ்லி 141 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் ஹாரிஸ் பந்தில் முகமது ஷமி (5) வெளியேறினார். 

ஜான்சன் ‘வேகத்தில்’ வருண் ஆரோன் (1) நடையைகட்டினார். லியான் பந்தில் இஷாந்த் ‘டக்–அவுட்’ ஆனார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 315 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

கரண் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 7, மிட்சல் ஜான்சன் 2, ஹாரிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

0 comments:

Post a Comment