இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா பதிலடியாக முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்தது. 

97 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய இந்தியா, நேற்றைய 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது. தவான் 26 ரன்னுடனும், புஜாரா 15 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

இன்று (சனிக்கிழமை) 4–வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. காயம் காரணமாக தவான் களம் இறங்கவில்லை. புஜாராவுடன் வீராட்கோலி இணைந்து ஆடினார். ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. 117 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தன. வீராட் கோலி (1), ரகானே (10), ரோகித்சர்மா (0) ஆகியோர் விக்கெட்டை ஜான்சன் கைப்பற்றினார். 

ஹாசில்வுட் பந்தில் கேப்டன் டோனியும் (0), ஸ்டார்க் பந்தில் அஸ்வினும் (19) ஆட்டம் இழந்தனர். காயம் காரணமாக தவான் 6–வது விக்கெட் விழுந்தபிறகு களம் வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த புஜாரா 7–வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 143 ஆக இருந்தது. 

தவான் தனி நபராக கடுமையாக போராடினார். 81 ரன்னில் அவரும் பெவிலியன் திரும்பினார். 145 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஸ்கோர் 203 ஆக இருந்தது. இந்திய அணி 64.3 ஓவரில் 224 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 128 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசியாக உமேஷ்யாதவ் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜான்சன் 4 விக்கெட் கைப்பற்றினார். ஹாசில்வுட், ஸ்டார்க், லயன் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. வார்னரும், ரோஜர்சும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 6 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வாட்சன் ரன் ஏதும் எடுக்காமலும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். பொறுப்புடன் ஆடிய ரோஜர்ஸ் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். 

இதையடுத்து கேப்டன் ஸ்மித்துடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் 17 ரன்கள் சேர்த்த நிலையில், யாதவிடம் விக்கெட்டை இழந்தார். ஆரோன் வீசிய நோபாலை தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்ற ஸ்மித் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 28. அடுத்த ஓவரில் ஹாடினை (1) வெளியேற்றினார் யாதவ். இந்த இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 122 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன் பின்னர் 24-வது ஓவரில் மார்ஷ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

1 comments:

  1. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

    ReplyDelete