தொடர்ந்து விளையாடுவேன் - கங்குலி பல்டி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து விளையாடுவேன்,'' என, கங்குலி திடீரென தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி (38). கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

பின், ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியில் இடம் பிடித்து, கேப்டனாக செயல்பட்டார். மூன்று ஐ.பி.எல்., தொடரில், 40 போட்டிகளில் பங்கேற்று, 7 அரைசதம் உட்பட 1031 ரன்கள் எடுத்துள்ளார்.


ஒதுக்கப்பட்ட தாதா:

தாதா என்று கோல்கட்டா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரை, நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், கோல்கட்டா உட்பட எந்த ஒரு அணியும் தேர்வு செய்ய முன்வரவில்லை. கொச்சி அணி கங்குலியை தேர்வு செய்ய முன்வந்த போதும், பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐ.பி.எல்., போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.


ஓய்வு அறிவிப்பு:

இதுகுறித்து ஆங்கில "டிவி' சானலுக்கு கங்குலி அளித்த பேட்டியில்,"" ஐ.பி.எல்., உட்பட அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறேன். எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகும் திட்டம் உள்ளது,'' என, தெரிவித்து இருந்தார்.


திடீர் மறுப்பு:

இந்நிலையில் தனது ஓய்வு செய்திக்கு கங்குலி திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறியது:

கடந்த தொடரில் நான் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தேன். எனது வயதுள்ள கில்கிறிஸ்ட், டிராவிட், லட்சுமண் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று தெரியவில்லை.

கொச்சி அணியில் இருந்து என்னை அணுகினர். நானும் இதற்கு சம்மதித்து இருந்தேன். ஆனால் இதற்குரிய விதியை திருத்தவில்லை.

கிரிக்கெட் விதிப்படி பழைய சாதனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் என்னை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், திறமை அடிப்படையில் இல்லாமல், பல்வேறு காரணங்களுக்காக, என்னை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதனால் தான், இந்த ஐ.பி.எல்., தொடரில் தான் விளையாட முடியாது என்று தெரிவித்து இருந்தேன். ஒருவேளை ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன். மற்றவகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்.

இதுகுறித்து நான் சொன்ன செய்திகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment