கிரிக்கெட்டின் ஒபாமா தோனி

இந்திய அணி கேப்டன் தோனி தலைமை பண்பில் சிறந்து விளங்குகிறார். இவர் "கிரிக்கெட்டின் ஒபாமாவாக திகழ்கிறார், என, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. பதட்டமான நேரத்திலும் கூட மிகவும் "கூலாக செயல்படக் கூடியவர். இவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல தலைமைப் பண்பில் மிகச் சிறந்து விளங்குவதாக, சக வீரர் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள உற்சாகத்தில் இவர் கூறியது:

உலக கோப்பை தொடர் என்பது சாதாரண தொடர் அல்ல. இதில் அதிக உணர்ச்சிகளுடன் கூடிய எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும். இதற்கான இந்திய தேசிய அணியில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இத்தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்ததன் மூலம், எனது கனவு நிறைவேறியுள்ளது.

இந்திய ஆடுகளங்கள், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போல் இல்லாமல் மெதுவாக செயல்படும். இங்கு, சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையில் பவுலிங் செய்ய வேண்டியது இருக்கும். போட்டியின் போது ஜாகிர் கானும், ஆஷிஸ் நெஹ்ராவும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியான நேரங்களில் பயன்தரும் வகையிலான ஆலோசனைகளை தந்து உதவுவார்கள்.


பேட்டிங் ஆறுதல்:

உத்தர பிரதேச அணி மற்றும் இந்தியா "ஏ அணிகளில் பேட்டிங்கில் நான் தான் துவக்க ஆட்டக்காரர். இதனால் எனது பேட்டிங் திறமை எனக்கு நன்கு தெரியும். ஆனால் இந்திய அணி என்று வரும் போது, உலகத்தரம் வாய்ந்த துவக்க வீரர்கள் உள்ளனர். எப்படி இருப்பினும், பேட்டிங்கில் என்னால் இயன்ற அளவுக்கு ரன்களை எடுத்து அணிக்கு உதவினால் மகிழ்ச்சியடைவேன்.


கோப்பை வாய்ப்பு:

சமீபத்தில் பல தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இது உலக கோப்பை தொடருக்கு சாதகமாக இருப்பது உறுதி. தற்போதுள்ள இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இத்தொடருக்கான பயிற்சியும் நல்லவிதமாக அமைந்துள்ளது. இதனால் எப்படியும் கோப்பை வெல்லமுடியும் என நம்புகிறேன்.


கிரிக்கெட்டின் ஒபாமா:

இதற்கு அணியின் கேப்டன் தோனி உதவுவார். ஏனெனில் போட்டியில் தோல்வியடையக் கூடிய மோசமான நிலையில் கூட, தோனி "கூலாக இருப்பார். வழக்கத்துக்கு மாறாக கடைசி வரைக்கும் நம்பிக்கையுடன் காணப்படுவார். சக வீரர்களை ஊக்குவித்து, அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவார். மொத்தத்தில் கிரிக்கெட்டின் "ஒபாமா என்று தோனியை அழைக்கலாம்.


நம்பிக்கை உள்ளது:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த காயத்துக்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்து வருவதால், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பாக, சரியான பயிற்சிகள் எடுத்து மீண்டு விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சமீபகாலமாக நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வரும், இவர்கள் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்தார்.


இங்கிலாந்தில் சிகிச்சை

உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நேரத்தில், பிரவீண் குமாரின் முழங்கை காயம் இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது. இதனால் காயத்துக்கு சிகிச்சை , பிரவீண் குமார் இங்கிலாந்து செல்கிறார். ஒருவேளை காயம் குணமடையாத பட்சத்தில், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

0 comments:

Post a Comment