கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது சென்னை

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக 75 ரன்கள் விளாச, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத் தவறிய சென்னை அணி ஏமாற்றம் அளித்தது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக்போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் டேனியல் வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' சொதப்பல்:

சென்னை கிங்ஸ் அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள், பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஜாகிர் கான் வேகத்தில் மைக்கேல் ஹசி (4) "போல்டானார்'. அரவிந்த் பந்தில் முரளி விஜய் (6) அவுட்டானார். சுரேஷ் ரெய்னா (4), ஜாகிர் கானிடம் சரணடைந்தார். அடுத்து வந்த பத்ரிநாத் (0), வெட்டோரி சுழலில் சிக்க, சென்னை அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


தோனி அரைசதம்:

பின் விரிதிமன் சகா, கேப்டன் தோனி ஜோடி அணியை சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்டது. பொறுப்பாக ஆடிய இந்த ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த போது, விராத் கோஹ்லி வேகத்தில் சகா (22) வெளியேறினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, பெங்களூரு பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆனால் டேரன் பிராவோ (5), ஆல்பி மார்கல் (5), அஷ்வின் (2) உள்ளிட்டோர் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

அரவிந்த் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்த தோனி, தனது அரைசதத்தை பதிவு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. ஆறு சிக்சர், மூன்று பவுண்டரி உட்பட 40 பந்தில் 70 ரன்கள் எடுத்த தோனி அவுட்டாகாமல் இருந்தார்.


கெய்ல் அரைசதம்:

சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, டிவிலியர்ஸ் (0) மோசமான துவக்கம் அளித்தார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது விராத் கோஹ்லி (31) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல், சிக்சர் மழை பொழிந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல், பிராவோ பந்தில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.


பெங்களூரு பதிலடி:

தனது வாணவேடிக்கையை தொடர்ந்த கெய்ல், ரெய்னா வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் ஒரு "சிக்சர்', ஒரு "பவுண்டரி' அடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் (75 ரன்கள், 50 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி), திவாரி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன்மூலம் கடந்த லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு பெங்களூரு அணி பதிலடி கொடுத்தது. ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment