விளம்பர உலகின் "ஹீரோ' தோனி

விளம்பர உலகில் செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்கள் வரிசையில் இந்திய கேப்டன் தோனி முன்னணியில் இருக்கிறார். இவர், நடால், கோப் பிரயண்ட் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை முந்தி, 10வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் இவரது தலைமையிலான அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. சமீபத்தில் 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றினார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்று தந்தார்.

இவர் தொட்டதெல்லாம் பொன்னாக, விளம்பர நிறுவனங்களை மொய்க்க துவங்கின. தங்களது பொருட்களுக்கு "மாடலாக' தோன்ற இவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தன.

லண்டனில் இருந்து வெளியாகும் "ஸ்போர்ட்ஸ் புரோ' என்ற பத்திரிகையின் சமீபத்திய கணிப்பின்படி தென் கிழக்கு ஆசியாவின் "நம்பர்-1' விளம்பர நட்சத்திரமாக தோனி திகழ்கிறார்.


யுவராஜ் 49வது இடம்:

இப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால், அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிரயன்ட் ஆகியோரை முந்திய தோனி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளார். கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெசி முறையே மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனர். சீனாவின் பிரபல கூடைப்பந்து வீரர் யாவ் மிங் 11வது இடத்தை பெற்றுள்ளார்.

உலக கோப்பை போட்டிகளில் அசத்தி தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் யுவராஜ் சிங் 49வது இடத்தை பிடித்துள்ளார். "டாப்-10' பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் நட்சத்திரம் என்ற பெருமையை "டென்னிஸ் புயல்' கரோலின் வோஸ்னியாக்கி(9வது இடம்) பெறுகிறார்.

இது குறித்து "ஸ்போர்ட்ஸ் புரோ' பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் குஷன் கூறுகையில்,""உலக கோப்பை வென்ற பின் தோனியின் புகழ் விளம்பர உலகில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் சச்சின் அளவுக்கு பேராதரவு இல்லை.

ஆனாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தங்களது பெருட்களை விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களின் "நம்பர்-1' தேர்வாக தோனி திகழ்கிறார்,''என்றார்.

0 comments:

Post a Comment