புனே அணிக்கு கைகொடுப்பாரா கங்குலி

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள மற்றொரு லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள புனே அணிக்கு கைகொடுக்க, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி காத்திருக்கிறார்.

மொகாலியில், இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடருக்கான மற்றொரு லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் வழிநடத்தும் புனே வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.


கங்குலி எதிர்பார்ப்பு:

புனே அணி, இதுவரை விளையாடியுள்ள ஒன்பது லீக் போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி கண்டது. தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி கண்ட யுவராஜ் அணி, இன்று கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட, முன்னாள் கோல்கட்டா அணி கேப்டன் சவுரவ் கங்குலி, ஒருவழியாக புனே அணியில் இடம் பிடித்தார்.

அனுபவ வீரரான இவர், ஐ.பி.எல்., அரங்கில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். எனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள புனே அணிக்கு, இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கைகொடுப்பார் என இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இவரை தவிர ஜெசி ரைடர், மனீஷ் பாண்டே, ஸ்மித், ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பதிவு செய்து எழுச்சி பெறலாம்.


ராகுல் அபாரம்:

புனே அணியின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. மும்பை அணிக்கு எதிராக சுழலில் அசத்திய ராகுல் சர்மா, இன்றும் கைகொடுக்கலாம். இவருக்கு யுவராஜ் சிங் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் அல்போன்சா தாமஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இவருடன் இணைந்து ஸ்ரீகாந்த் வாக், ஜெரோம் டெய்லர், ஜெசி ரைடர் உள்ளிட்டோர் சாதிக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.


கில்கிறிஸ்ட் நம்பிக்கை:

பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் சூப்பர் துவக்கம் அளிப்பது பேட்டிங்கில் பலம் சேர்க்கிறது. சில போட்டிகளில் அதிரடி காட்டிய வல்தாட்டி, அதன்பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே இவர் இன்று எழுச்சி பெறும் பட்சத்தில், இமாலய இலக்கை அடைய வழிவகுக்கலாம்.

"சூப்பர் பார்மில்' உள்ள மார்ஷ், இன்றும் தனது அதிரடியை தொடரலாம். டேவிட் ஹசி, தினேஷ் கார்த்திக், அபிஷேக் நாயர் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' கைகொடுக்கும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம்.


சாவ்லா துல்லியம்:

பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சில் பியுஸ் சாவ்லா சிறப்பாக செயல்பட்டு வருவது பலம். இவருக்கு பார்கவ் பட், பிபுல் சர்மா உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கிறார். இருப்பினும் இவர், விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது. ரேயான் ஹாரிஸ், வல்தாட்டி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் எளிதில் வெற்றி பெறலாம்.


பதிலடி வாய்ப்பு:

சமீபத்தில் மும்பையில் நடந்த போட்டியில், புனே வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இன்று பஞ்சாப் வீரர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில், இத்தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம்.

0 comments:

Post a Comment