சுதிர்மான் கோப்பை இறகுப்பந்து: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா


குவாங்சோ: சுதிர்மான் கோப்பை இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை 5-0 என்ற கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.சர்வதேச அணிகள் பங்கேற்கும் 11வது சுதிர்மேன் கோப்பை இறகுப்பந்து போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவில் நடக்கிறது.  இதில் இந்தியா, இலங்கை உட்பட 34 அணிகள் பங்கேற்றுள்ளன

இதில் "3-பி' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட நான்கு அணிகள் விளையாடின. முதல் இரண்டு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, உக்ரைன் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது. 

புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் முதல் கேமை 18-21 என இழந்தாலும், அடுத்த கேம்களில் கடுமையாகப் போராடி 21-13, 21-19 என ஸ்காட்லாந்தின் சுசன் ஹியூûஸ 52 நிமிடங்களில் வென்றார்.

2-வது ஆட்டத்தில் அரவிந்த் 21-15, 21-16 என்ற நேர் செட்டுகளில் கார்டன் தாம்சனை எளிதாக வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் வி.திஜு, ஜுவாலா கட்டா இணை 21-17, 21-12 என ஆன்ட்ரூ பெüமன், எம்மா மேசன் இணையை சாய்த்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சனவே தாமஸ், ருபேஷ் குமார் ஜோடி 33 நிமிடங்களில் 21-18, 25-23 என ஆன்ட்ரூ பெüமன், தாமஸ் பெதெல் ஜோடியைத் தோற்கடித்தது.

மகளிர் இரட்டையர் பிரிவில், அபர்ணா பாலன், ஸ்ருதி குரியன் ஜோடி 21-12, 21-15 என்ற செட்டுகளில் எம்மா மேசன், ஜில்லி கூப்பர் ஜோடியை வென்று இந்தியாவுக்கு அபார வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இதன் மூலம் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி "3-ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த பல்கேரியா அணியை சந்திக்கிறது.

இதற்கு முந்தைய ஆட்டங்களில் இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவையும், 5-0 என உக்ரைனையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

1 comments:

  1. இந்தியா ஹாக்கிதான் நல்லா விளையாடல. இறகுபந்தாவது நல்லா விளையாடட்டும்.

    ReplyDelete