விராத் கோஹ்லி அபார சதம் - தோனி 99-ல் ரன் அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் விராத் கோஹ்லி சதம் அடித்தார். தோனி 99 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (11), கேப்டன் தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தோனி, கோஹ்லி இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது மந்தமான ஆட்டத்தினால் ஸ்கோர், ஒன்றிரண்டு ரன்களாக உயர்ந்தது. 

தோனி 28 வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் சதம் அடித்த விராத் கோஹ்லி, 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜடேஜா 12 ரன்கள் எடுத்தார். தோனி 99 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட்டானார். சாவ்லா (1) விரைவில் திரும்பினார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வின் (7) அவுட்டாகாமல் உள்ளார். 

மீண்டும் வருவாரா ஸ்ரீசாந்த்?


உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து, மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன்,'' என, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 29. 2005ல் சர்வதேச போட்டிகளில் காலடி வைத்த இவர், இதுவரை 27 டெஸ்ட் (87 விக்.,), 53 ஒருநாள் (75 விக்.,), 10 சர்வதேச "டுவென்டி-20' (7 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, பெருவிரலில் காயம் ஏற்பட்டது. 

வலது, இடது கால் பெருவிரலில் தலா 6 "ஆபரேஷன்' செய்து கொண்ட இவர், ஒரு ஆண்டுக்கு மேலாக ஓய்வில் இருந்தார். 

பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி மேற்கொண்ட இவர், இன்று அகர்தலாவில் துவங்கவுள்ள திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறார்.

ஸ்ரீசாந்த் கூறியது: கால் விரல்களில் அடுத்தடுத்து "ஆபரேஷன்' செய்து கொண்டதால், நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. "வீல்சேரை' பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. 

இதனால் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைத்தேன். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் கேரளா கிரிக்கெட் சங்கம் (கே.சி.ஏ.,) உதவியுடன் முன்னேற்றம் கண்டுள்ளேன்.

ஒரு ஆண்டுக்கு மேலாக இந்திய அணியின் "டி-சர்ட்' அணிந்து, போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. 

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பதே இலக்கு. 

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

நாக்பூர் டெஸ்ட் - மீண்டும் போல்டானார் சச்சின்


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இந்திய வீரர் சச்சின் மீண்டும் "போல்டானார். 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 

கடைசி டெஸ்ட், நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. பிரையர் (34), ரூட் (31) அவுட்டாகாமல் இருந்தனர். 

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பிரையர், 24வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 57 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில் சிக்கினார். 

மறுமுனையில் அறிமுக வீரர் ஜோ ரூட்(73) முதல் அரைசதம் அடித்தார். பின் வந்த பிரஸ்னன் "டக் அவுட்டானார். அதிரடி ஆட்டத்தை கையாண்ட சுவான் (56) டெஸ்ட் அரங்கில் 5வது அரைசதத்தை எட்டினார். 

ஆண்டர்சன் (4) அவுட்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு "ஆல் அவுட் ஆனது. பனேசர் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியா சார்பில் சாவ்லா 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர். 

பின் முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு சேவக் டக் அவுட்டானார். புஜாரா (26) நிலைக்கவில்லை. 

ஆண்டர்சன் வேகத்தில் சச்சின் (2) போல்டானார். காம்பிர் (37) நிலைக்கவில்லை. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 

கோஹ்லி(11), தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

தோனியின் நீக்கத்தை தடுத்தது யார்?


தேர்வுக்குழுவின் முடிவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தலையிட்டதால் தான், தோனியின் கேப்டன் பதவி நீடிக்கிறது,'' என, முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மொகிந்தர் அமர்நாத் உண்மையை போட்டு உடைத்தார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் தோனி, 31. இவரது தலைமையில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, சமீப காலமாக தடுமாறுகிறது. தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு ஆதரவு அளித்த முன்னாள் இந்திய வீரர் அமர்நாத், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,""கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்த போது, தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் நடந்தன. 

இதற்கு தேர்வுக்குழுவினரும் ஆதரவு தெரிவித்தனர். கடைசியில், சில உள் விவகாரத்தால், அது முடியாமல் போனது. இக்காரணத்தை தற்போது வெளியே கூற விரும்பவில்லை. சரியான நேரம் வரும் போது வெளிப்படுத்துவேன்,'' என்றார்.

தற்போது உண்மையை போட்டு உடைத்த அமர்நாத் கூறியது: டெஸ்ட் போட்டிகளில் கண்ட தொடர் தோல்விக்கு பின், கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க தேர்வுக்குழுவினர் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தோம். ஆனால் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் அனுமதி அளிக்காததால், அது தடைபட்டது. 

தனிநபர் மட்டுமே எடுக்கும் இறுதி முடிவுக்கு, தேர்வுக்குழு தேவையில்லை. பி.சி.சி.ஐ.,யின் சட்ட விதிமுறைகள் எனக்கு புரியவில்லை. இது, தற்போதுள்ள தேர்வுக்குழுவினருக்கு தெரியுமா எனவும் தெரியவில்லை.

அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு, 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தோம். கேப்டன் யார் என்பதை ஒரு தனிநபர் மட்டுமே முடிவு செய்தார். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முத்தரப்பு தொடருக்கு இளம் வீரரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்தோம். அது நடக்கவில்லை.

ஐ.பி.எல்., தொடரில், சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இருப்பதால் தான், சர்வதேச போட்டிகளுக்கும் கேப்டனாக நீடிக்கிறார் எனக் கூற முடியாது. இது தனிப்பட்ட விஷயம். இதுகுறித்து கருத்து கூற கூடாது.

இவ்வாறு அமர்நாத் கூறினார்.

பி.சி.சி.ஐ., மறுப்பு

அமர்நாத் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், ""அணித் தேர்வில் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் தலையீடு இருப்பது உண்மைக்கு புறம்பானது. அமர்நாத் கூறியதை ஏற்க முடியாது. அவர் கூறிய கருத்துக்கு, அப்போதைய தேர்வுக்குழுவில் இருந்த யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை,'' என்றார்.

இது சரியான நேரமல்ல

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,"" இப்போதைய நிலையில், தோனிக்கு சரியான மாற்று வீரர் யாரும் இல்லை. இவரும், விராத் கோஹ்லியும் மைதானத்தில் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், தோனி பல "கேட்ச்'களை பிடித்தார். 

இவரை, கேப்டன் பதவியில் இருந்து, நீக்க இது சரியான நேரம் இல்லை. அணியை தேர்வு செய்யும், இறுதி முடிவு இந்திய கிரிக்கெட் போர்டுக்குத்தான் (பி.சி.சி.ஐ.,) உள்ளது,'' என்றார்.

தோனி நீடிப்பது ஏன்? அமர்நாத் திடுக் தகவல்


டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க முயற்சிகள் நடந்தது உண்மை தான்,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகிந்தர் அமர்நாத் தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்குபவர் தோனி, 31. இவரது தலைமையில் இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2012) மற்றும் டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடம் என வெற்றி மேல் வெற்றிகளை குவித்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 8 டெஸ்டில் இந்திய அணி தோற்றது. 

இதையடுத்து அணியின் கேப்டன் தோனியை நீக்க வேண்டும் என, அப்போதைய தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்த, அமர்நாத் தெரிவித்தார். தேர்வுக்குழுத் தலைவராக வர வாய்ப்பிருந்த நிலையில், தோனியை எதிர்த்தார் என்பதற்காக, கடைசியில் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தோல்விகளை சந்திக்கிறது. 

இதனிடையே, தோனி குறித்து அமர்நாத் கூறியது:

இந்திய அரசியலும், கிரிக்கெட்டும் ஒன்று தான். ஒரு சிலர் போட்டியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். இதனால், மற்றவர்கள் பொறுப்புக்கு வர பயப்படுவர். 

தொடர்ச்சியான தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க, அப்போது முயற்சிகள் நடந்தது உண்மைதான். இதற்கு தேர்வுக்குழுவினர் ஆதரவு தெரிவித்தனர். கடைசியில் சில உள் விவகாரத்தால், அது முடியாமல் போனது. இந்த காரணங்களை இப்போது வெளியில் கூற விரும்பவில்லை. ஆனால், சரியான நேரம் வரும் போது, இந்த நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படுத்துவேன். 

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என நம்புகிறேன். இரண்டு உலக கோப்பை பெற்றுத் தந்ததை விட, டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்தார். கேப்டனாக இருப்பதால் தான், அணியில் இவருக்கு இடம் கிடைக்கிறது. இவரை அணியில் இருந்து நீக்க, தேர்வுக் குழுவினருக்கு துணிச்சல் இல்லை. 

தோனியால் தான், திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் தோனிக்கு எதிரானவன் அல்ல. இந்திய அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்பதால், மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

இரண்டு கேப்டன்: 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு தனி கேப்டன்களை நியமிப்பது நல்லது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளுக்கு விராத் கோஹ்லி, டெஸ்ட் போட்டிக்கு கவுதம் காம்பிரை கேப்டனாக நியமிக்கலாம். சோபிக்காத வீரர்களை நீக்கிவிட்டு, திறமையான இளம் வீரர்களை சேர்க்க வேண்டும். 

தகுதியற்ற வீரர்கள்: 

தற்போது அணியில் உள்ள சில வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் உள்ளனர். மாற்று வீரர் இல்லாததால், தொடர்ந்து போட்டியில் விளையாடுகின்றனர். "பார்ம்', உடற்தகுதி இல்லாத வீரர்கள் தாமாகவே முன்வந்து ஓய்வு எடுக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும். இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

மீண்டும் இடம்: 

அடுத்த ஆண்டு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளோம். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் திறமையை நிரூபித்து, மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும். 

சச்சின் சிறந்த வீரர். இவர், நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். தற்போது "பார்மின்றி' தவிக்கும் இவரால், சிறப்பாக செயல்பட முடியவில்லை. விரைவில், "பார்மை' மீட்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அமர்நாத் கூறினார்.