சச்சின் தவற விட்ட பரிசு

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர் அங்கு கிடைக்க இருந்த நினைவுப் பரிசு ஒன்றை தவறவிட்டு விட்டார்.

சச்சின் ஆஸ்திரேலிய மண்ணில் தனது 100-வது சதத்தை எடுத்தால் அவருக்கு அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகுந்த எதிர்பார்ப்புடனும், அதிக அக்கறையுடனும் அந்த நினைவுப் பரிசை தயாரித்து வைத்திருந்தது.

ஆனால் சதம் அடிக்காததால் அந்தப் பரிசை பெற முடியாமல் சச்சின் திரும்பிவிட்டார்.

அந்த நினைவுப் பரிசில் சச்சின் அடித்த 100 சதத்துக்குப் பாராட்டு என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 சதம் அடித்த இடம் மட்டும் பொறிக்கப்படாமல் இருந்தது.

ஏனெனில் சதம் அடித்த உடன் நகரின் பெயரை பொறித்து சச்சின் கையில் கொடுத்து விட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது.

எப்படியும் சதம் அடித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் சச்சின் பங்கேற்ற டெஸ்ட், ஒருநாள் போட்டி நடைபெற்ற நகரங்களுக்கெல்லாம் அந்த நினைவுப் பரிசை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கையோடு எடுத்து வந்திருந்தனர்.

ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை என்று "ஆஸ்திரேலியன்' பத்திரிகை சற்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது.

டிராவிட் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

டிராவிட் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று தெண்டுல்கர் புகழாரம் சூட்டினார். இந்திய கிரிக்கெட் அணியின் கிரேட் வால் (பெருஞ்சுவர்) என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

இப்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து இவரை புறக்கணித்து வந்ததால், இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட்டின் ஓய்வு அறிவிப்பு பற்றி, 'மாஸ்டர்' பேட்ஸ்மேன் தெண்டுல்கர் கூறியதாவது:-

போட்டிகளில் மத்திய நிலை ஆட்டக்காரராக இறங்கி டிராவிட் என்னோடு விளையாடுவார். இப்போது இந்த தருணத்தை நான் இழந்துள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து பல தடவை 'செஞ்சுரி' அடித்துள்ளோம். அணியில் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அப்படிபட்ட சாதனையாளருக்கு வெறும் பாராட்டுகள், புகழ் மாலைகள் மட்டும் போதாது என்று கருதுகிறேன். அவர் வேறு வகைகளில் கவுரவப் படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிப்பில் தெண்டுல்கருக்கு அடுத்த நிலையில் டிராவிட் உள்ளார். அவர் 164 போட்டிகளில் விளையாடி 13,288 ரன் குவித்துள்ளார். (சராசரி 52.31) இதில் 36 சதங்களும், 63 அரை சதங்களும் அடங்கும்.

ஒரு நாள் போட்டிகளில் 344 ஆட்டங்களில் பங்கேற்று, 10,899 ரன் குவித்துள்ளார். (சராசரி 39.16) இதில் 12 சதங் களும் 83 அரை சதங்களும் அடங்கும்.

இத்தருணத்தில் இந்திய அணியின் சுவருக்கு மாலைமலர் இணையதளம் அதன் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஆசியக் கோப்பை போட்டி நாளை மறுநாள் துவக்கம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் விளையாடுகின்றன.

இப்போட்டியில் 6 தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அணியும் எதிர் அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 22 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.

வங்கதேசம், மிர்பூரில் உள்ள ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன.

போட்டிகளின் விபரம்

மார்ச் 11 - வங்கதேசம் x பாகிஸ்தான்
மார்ச் 13 - இந்தியா x இலங்கை
மார்ச் 15 - பாகிஸ்தான் x இலங்கை
மார்ச் 16 - இந்தியா x வங்கதேசம்
மார்ச் 18 - இந்தியா x பாகிஸ்தான்
மார்ச் 20 - வங்கதேசம் x இலங்கை
மார்ச் 22 - இறுதிப்போட்டி

10 முறை நடைபெற்றுள்ள ஆசியக்கோப்பை தொடரில் 5 முறை இந்திய அணியும், 4 முறை இலங்கை அணியும் கோப்பையை வென்றுள்ளன. பாகிஸ்தான் ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 18-ம் தேதி சந்திக்க இருக்கிறது. இப்போட்டி இருநாட்டு ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி கடந்த சில மாதங்களாக தோல்வி முகத்தில் இருந்தாலும், இத்தொடரிலாவது எழுச்சி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

டுவென்டி-20 : சச்சினுக்கு பதில் உத்தப்பா

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணியில் சச்சினுக்கு பதில் ராபின் உத்தப்பா இடம் பெற்றார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியர்கள் குடியேறி, 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் வகையில், இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டி, வரும் மார்ச் 30ல் ஜோகனஸ்பர்க்கில் நடக்க உள்ளது.

இதில், ஆசிய கோப்பை தொடரில்(மார்ச் 11-22) பங்கேற்கும் அதே இந்திய அணியே பங்கேற்கிறது. சேவக் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.

துணை கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி ஏற்கிறார். சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து சச்சின் ஏற்கனவே விலகி விட்டார்.

இவருக்கு பதில் உத்தப்பா இடம் பெறுகிறார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் அபாரமாக ஆடிய உத்தப்பா இரண்டு சதம் அடித்து திறமை நிரூபித்தார்.


"டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணி:

தோனி(கேப்டன்), விராத் கோஹ்லி(துணை கேப்டன்), உத்தப்பா, காம்பிர், ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசப் பதான், மனோஜ் திவாரி, இர்பான் பதான், அசோக் டிண்டா.

தென் ஆப்ரிக்காவுக்கு நம்பர் 1 வாய்ப்பு

நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கும் டெஸ்ட் தொடரை, தென் ஆப்ரிக்க அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி இன்று டுனிடினில் துவங்குகிறது. சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை 3-0 என வென்ற தென் ஆப்ரிக்க அணியின் அனைத்து வீரர்களும், நல்ல பார்மில் உள்ளனர். கேப்டன் ஸ்மித், ஆம்லா, டிவிலியர்ஸ், காலிஸ், ஸ்டைன் எதிரணிக்கு தொல்லை தருவது நிச்சயம்.

அதேநேரம், ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்தமண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்ற உற்சாகத்தில் ராஸ் டெய்லரின் நியூசிலாந்து அணி உள்ளது. இருப்பினும், கப்டில், நிக்கோல், இன்று அறிமுகமாகும் வான் விக் ஆகியோரது அனுபமின்மை சிக்கல் தான்.


முதலிட வாய்ப்பு:

தற்போது டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து (118 புள்ளி), தென் ஆப்ரிக்கா (117), இந்திய (111) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணி (83) எட்டாவது இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை தென் ஆப்ரிக்க அணி முழுமையாக வென்றால், 119 புள்ளிகள் பெற்று "நம்பர்-1' இடத்தை பிடிக்கலாம்.


ரூ. 88 லட்சம் பரிசு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விதிப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப். 1ம் தேதி, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் "மேஸ்' விருதும், ரூ. 88 லட்சம் பரிசும் வழங்கப்படும். இம்முறை தென் ஆப்ரிக்க அணி, இதை தட்டிச் செல்லலாம்.

ஏனெனில், தற்போது முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, அடுத்து மார்ச் 26ல் தான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இத்தொடர் ஏப். 7ல் தான் முடியும் என்பதால், இங்கிலாந்துக்கு இரண்டாவது இடம் மற்றும் ரூ. 38 லட்சம் பரிசு தான் கிடைக்கும்.