இலங்கை அணிக்கு நம்பர் 1 வாய்ப்பு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இலங்கை அணி முதன்முறையாக "நம்பர்-1' இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், தற்போது 130 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

இலங்கை (118 புள்ளி), இந்தியா (117 புள்ளி), தென் ஆப்ரிக்கா (116 புள்ளி), இங்கிலாந்து (106 புள்ளி) உள்ளிட்ட அணிகள் "டாப்-5' வரிசையில் உள்ளன. இப்பட்டியலில், முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, பல்லேகெலே மைதானத்தில் இன்று நடக்கிறது.

இத்தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில், 125 புள்ளிகளுடன் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை அடையலாம்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி, கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கை அணி 5-0 எனக் கைப்பற்றும் பட்சத்தில், 129 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணி, 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில் 133 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும். ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் பட்சத்தில், 136 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 112 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்.

இளம் இந்திய அணி அபாரம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று நாள் போட்டியில், இளம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்தின் இளம் வீரர்கள் அடங்கிய, கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 3 நாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியை "டிரா' செய்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.


திவாரி சதம்:

"டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு மனோஜ் திவாரியின் (188) அபார சதம், மனிஷ் பாண்டேயின் (96) அதிரடி கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு, 404 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.

தலா 3 விக்கெட் வீழ்த்திய இக்பால் அப்துல்லா, அரவிந்த் பட் ஆகியோரின் பவுலிங்கில் திணறிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 272 ரன்கள் மட்டும் எடுத்து "பாலோ ஆன்' ஆனது.


வினய் அபாரம்:

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில், வினய் குமாரின் (4 விக்.,) வேகத்தில் சிக்கி, நியூசிலாந்து அணி 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது.

108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணிக்கு சிகர் தவான் (3) அதிர்ச்சி தந்தார்.

பின் ரகானே (45*), முரளிதரன் கவுதம் (44*) இணைந்து அசத்த, இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் அணியில் மீண்டும் டிராவிட்

இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20', ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில், எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் ராகுல் டிராவிட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். "சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி, ஆக. 31ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. பின் செப்டம்பர் 3 முதல் 16ம் தேதி வரை, 5 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது.

இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதத்தில், இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காத டிராவிட் (38), தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் டிராவிட். பின் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக செயல்பட்டதை அடுத்து, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் 2009ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அணியில் சேர்க்கப்பட்டார்.


மீண்டும் நீக்கம்:

இத்தொடருக்குப் பின் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவரை, சமீபத்தில் முடிந்த உலக கோப்பை அணியில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய ஜமைக்கா (வெஸ்ட் இண்டீஸ்) டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ், நாட்டிங்காம் டெஸ்டில், அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார் டிராவிட்.

ஆனால், மற்ற இளம் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்புகின்றனர். இதையடுத்து வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில், நிலையில்லாமல் இருக்கும் இந்திய அணியின் பேட்டிங்கை நிலைப்படுத்த, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு தேடிவந்துள்ளது.


ஹர்பஜன் நீக்கம்:

வயிற்று பிடிப்பு காரணமாக தற்போதைய டெஸ்ட் தொடரில் இருந்து சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டார். தவிர, சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வரும் இவர், அடுத்து வரும் "டுவென்டி-20', ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.


துணைக் கேப்டன்:

இதேபோல, கைவிரலில் காயம் அடைந்த யுவராஜ் சிங்கிற்கு, எஞ்சியுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு தரப்பட்டுள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான அணியில் சேவக்கிற்கு துணைக் கேப்டன் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. இவர்களுடன் சச்சின், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, பார்த்திவ் படேலும் அணியில் இடம் பெற்றனர்.


அஷ்வினுக்கு இடம்:

வேகப்பந்து வீச்சாளர் பிரிவில் ஜாகிர் கான், பிரவீண் குமார், முனாப் படேல், ஜாகிர் கான் ஆகியோருடன் இம்முறை வினய் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக தமிழகத்தின் அஷ்வின், அமித் மிஸ்ரா தேர்வாகினர்.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக் (துணைக் கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா, ஜாகிர் கான், அஷ்வின், பிரவீண் குமார், முனாப் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, வினய் குமார் மற்றும் பார்த்திவ் படேல்.


ஆறு பேர் "அவுட்'

சமீபத்தில் முடிந்த உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருந்த, ஆறு பேர் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை. இதில் யூசுப் பதான், ஸ்ரீசாந்த், பியுஸ் சாவ்லா, ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் பெயர் அணித் தேர்வில் பரிசீலிக்கப்படவில்லை. காயம் காரணமாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டனர்.


போபராவுக்கு வாய்ப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் மூன்றாவது டெஸ்ட், எட்பாஸ்டனில் நடக்கிறது. இதற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இருந்து, தோள்பட்டை காயம் காரணமாக டிராட் நீக்கப்பட்டு, ரவி போபரா சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல டிரம்லட் காயம் முழுமையாக குணமடையாததால், கூடுதலாக ஸ்டீபன் பின் இடம்பெற்றார்.


சூழ்நிலைக்கேற்ற முடிவு: ஸ்ரீகாந்த்

இந்திய அணி தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" இங்கிலாந்திலு<ள்ள ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப, தீவிர ஆய்வுக்குப் பின் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. யுவராஜ் சிங் முக்கியமான வீரர்.

காயம் காரணமாக இவர் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் தோற்று இருந்தாலும், அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணியினர் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

நான் பெருஞ்சுவர் அல்ல: டிராவிட்

என்னை இந்திய அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கின்றனர். நான் அவ்வாறு நினைக்கவில்லை,'' என, இந்திய வீரர் ராகுல் டிராவிட் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் டிராவிட். தூணாக நின்று ஆடும் இவர், அணியை இக்கட்டான நிலையில் இருப்பது மீட்பதில் வல்லவர். இதனால் இவரை ரசிகர்கள் "பெருஞ்சுவர்' என அழைக்கின்றனர்.


இது குறித்து டிராவிட் கூறியது:

அனைவரும் அழைப்பது போன்று பெருஞ்சுவராக என்னை ஒருபோதும் கருதவில்லை. தற்போது, ஒரு சில அனுபவ வீரர்கள் "டுவென்டி-20' போட்டியில் செயல்படுவது போன்று, அதிரடி ஆட்டத்தை கொடுக்க முயற்சிக்கின்றனர். இது டெஸ்ட் போட்டிக்கு உகந்தது அல்ல.

ஒரு நாள், "டுவென்டி-20', டெஸ்ட் போட்டி என எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அதனை சவாலாக எடுத்து கொண்டு செயல்பட்டால் சாதிக்கலாம். இது போன்று வெவ்வேறு வடிவத்திலான போட்டிகள் வீரர்களை பாதிக்காது. டெஸ்ட் போட்டிக்களுக்கு ரசிகர்கள் மத்தியிலான ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது.

ஏனென்றால் இந்தியாவில் 40,000 முதல் 45,000 மக்கள் வரை அமர்ந்து பார்க்கக் கூடிய கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இது முழுவதும் நிரம்பி வழிய வேண்டும் என்றால் முடியாது. டெஸ்ட் போட்டி நீண்ட நேரம் நடப்பதால், அனைவரும் தங்களுடைய வேலையினை விட்டுவிட்டு வந்து கிரிக்கெட் பார்க்க வரமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஓய்வு நேரத்தில் டெஸ்ட் போட்டியினை நிச்சயமாக கண்டு ரசிப்பார்கள்.

நான் கிரிக்கெட்டில் நுழைந்த போதெல்லாம் வீரர்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தற்போதுள்ள இளம் வீரர்கள் வளர்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. "டுவென்டி-20' போட்டிகள் மட்டும் சரியான வழி என்று நான் சொல்லவில்லை. மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று முடிவு எடுப்பது தான் சரியான முடிவு என நம்புகிறேன்.


அச்சம் தந்த முரளி:

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், பவுலிங்கில் அச்சத்தை கொடுக்கும் ஒரே வீரர் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன். இவரால் என்னுடைய தூக்கத்தை நிறைய நாள் இழந்துள்ளேன். இவருடைய பவுலிங் திறமை உண்மையிலேயே அபாரமானது.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. கடந்த 1996ல் இருந்து விளையாடி வருகிறேன். "நம்பர்-1' அணியில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


கடினமான போராட்டம்:

இந்திய அணிக்கு "நம்பர்-1' இடம் பிடித்தது குறுகிய காலத்தில் கிடைத்தது அல்ல. நீண்ட ஆண்டுகள் கடுமையான போராட்டத்தினை கொடுத்தற்கு கிடைத்த வெற்றி. நிறைய தடை மற்றும் போராட்டத்தை சந்தித்து வந்தால் தான் தற்போது, இந்திய அணி சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது.


சச்சினின் வெற்றி ரகசியம்:

குழந்தை தனமான மனதோடு போட்டிகளில் பங்கேற்று வருவதால் தான் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று வரை சாதித்து வருகிறார். இருபது ஆண்டை கடந்து கிரிக்கெட் போட்டிகளில் இவர் அசத்தி வருகிறார். இது சாதரணமான விஷயம் அல்ல. மிகவும் கடினமான ஒன்று. போட்டிகளுக்காக சிறப்பான முறையில் தயாராகுவார்.

நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங் "ஸ்டைலும்" மாறி கொண்டே வருகிறது. போட்டியின் தன்மையை மாற்ற கூடிய வீரர். ஒவ்வொரு முறையும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்து வீச்சாளர்களை திணற செய்து, வெற்றி காண்பார்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

பயிற்சியில் சாதிப்பாரா சேவக்?

இந்தியா மற்றும் நார்தாம்டன்ஷையர் அணிகள் மோதும் இரண்டு நாள் பயிற்சி போட்டி இன்று துவங்குகிறது. இப்போட்டியில் களமிறங்கும் சேவக், ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. லார்ட்ஸ், நாட்டிங்காமில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் வரும் 10ம் தேதி பர்மிங்காமில் துவங்குகிறது.


மீண்டும் சேவக்:

இதற்கு முன் இந்தியா, நார்தாம்டன்ஷையர் அணிகள் இடையிலான இரண்டு நாள் பயிற்சி போட்டி இன்று நார்தாம்டன் நகரில் நடக்கிறது. இதில் துவக்க வீரர் அபினவ் முகுந்த் நீக்கப்பட்டு, அணியின் வழக்கமான துவக்க ஜோடியான சேவக், காம்பிர் இருவரும் மீண்டும் களமிறங்கவுள்ளனர்.

கடந்த ஐ.பி.எல்., தொடரில் காயம் காரணமாக பாதியில் திரும்பிய சேவக், "ஆப்பரேசஷனுக்கு' பின் மீண்டுள்ளார். காம்பிரும் தயாராகிவிட்டார். முதல் இரண்டு போட்டிகளில் மோசமான துவக்கம் கிடைத்த நிலையில், இவர்கள் இந்த பயிற்சி போட்டியை நன்கு பயன்படுத்திக் கொண்டால், இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

"மிடில் ஆர்டரில்' டிராவிட், லட்சுமணுடன், சச்சின் களமிறங்கலாம். யுவராஜ் இல்லாததால் ரெய்னா வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஜாகிர் வருகை?

கேப்டன் தோனி பேட்டிங்கில் சற்று ஆறுதல் தர முயற்சிக்க வேண்டும். பவுலிங்கில் முதல் டெஸ்டில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் இன்று களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுழலில் அமித் மிஸ்ராவும், தற்போது லண்டனில் உள்ள சர்ரே அணிக்காக விளையாடி வரும் பிரக்யான் ஓஜாவும் இணைந்து பயிற்சி ஆட்டத்தில் சாதிக்க முயற்சித்தால் நல்லது.

நார்தாம்டன்ஷையர் அணியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அசத்திய ஜாக் புரூக்ஸ், டேவிட் மர்பி, கெவின் பார்க்கர், டேவிட் வில்லே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். தவிர, டேவிட் லுகாஸ், ஜேம்ஸ் மிடில்புரூக் ஆகியோரும் அசத்த காத்திருக்கின்றனர்.


பாதுகாப்பு அதிகரிப்பு:

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததால், தற்போது நார்தாம்டன் நகரில் தங்கியுள்ள இந்திய அணியினருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நாட்டிங்காம் போட்டியில் தோற்ற போது, அங்குள்ள இந்தியர்கள், வீரர்களுக்கு தொல்லையளிக்கும் வகையில் நடந்துள்ளனர். இதனால், இம்முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மழை வரும்

ஏற்கனவே இரண்டு தோல்விகளுடன் உள்ள இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில், போட்டி நடக்கும் இரண்டு நாளும் மழை வருவதற்கு 30 சதவீதம் வாய்ப்புள்ளது. தவிர, இன்றைய போட்டியும் தாமதமாக துவங்கப்படும் என்று தெரிகிறது.