1000 தியேட்டர்களில் ஐ.பி.எல்., போட்டி

நாடு முழுவதும் ஆயிரம் சினிமா தியேட்டர்களில் ஐ.பி.எல்., போட்டிகள் காண்பிக்கப்பட உள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக இருப்பதால், மைதானத்தில் அமர்ந்து போட்டியை காணும் உணர்வினை ரசிகர்கள் பெறலாம்.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் மூன்றாவது "டுவென்டி-20' தொடர், வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் உள்ள 60 போட்டிகளும், சினிமா தியேட்டரில் காண்பிக்கப்பட இருக்கிறது.

"3டி' ஜாலம்:

"அவதார்' படத்தை தொடர்ந்து பைனல் உட்பட சில போட்டிகளை "3 டி' மூலம் காண்பிக்கும் திட்டமும் உண்டு. இதற்கான ஏற்பாடுகளை யு.எப்.ஒ., மூவிஸ் நிறுவனம் செய்து வருகிறது. இது குறித்து, இதன் இணை இயக்குனர் கபில் அகர்வால் கூறியது:

உலகில் மிகவும் பிரபலமான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 9 நகரங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளோம். மிகப் பிரமாண்டமான திரையில் போட்டிகள் காண்பிக்கப்படும்.


விளம்பரம் "நோ':

முக்கியமாக விளம்பரங்களின் தொல்லை இல்லாமல் போட்டிகளை காணலாம். தைமானத்தை போல நடன பெண்களின் ஆட்டமும் இடம் பெறும். பொதுவாக ஐ.பி.எல்., போட்டிகளின் போது திரைப்படங்கள் "ரிலீஸ்' செய்யப்படுவதில்லை. இதனால் ஏற்படும் நஷ்டத்தை கிரிக்கெட் ஒளிபரப்பு மூலம் ஈடு செய்யலாம்.

இவ்வாறு கபில் அகர்வால் கூறினார்.

சண்டை இல்லை

ஐ.பி.எல்., போட்டிகள் தியேட்டரில் ஒளிபரப்பாக இருப்பதால், வீட்டில் சண்டை தவிர்க்கப்படுகிறது. இனி, பெண்கள் தங்களுக்கு விருப்பமான "மெகா' தொடர்களை "டிவியில்' எவ்வித இடையூறும் இல்லாமல் பார்க்கலாம். ஆண்கள் தியேட்டருக்கு சென்று ஐ.பி.எல்., போட்டிகளை காணலாம்.

திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை

உள்ளூர் கிரிக்கெட் அணிகளில், தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. இதனால் எதிர்காலத்தில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பற்றாக்குறை ஏற்படலாம்,'' என, லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர் லட்சுமண். இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6993 ரன்கள் குவித்துள்ளார். அனுபவ வீரரான இவர், இந்திய அணிக்கு திறமையான சுழற்பந்து வீச்சாளர் தேவை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து லட்சுமண் கூறியது: இந்திய அணியின் தற்போதைய சுழற்பந்து வீச்சு பாராட்டும் படியாக உள்ளது. ஆனால் இனி வரும் காலங்களில், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் உள்நாட்டு கிரிக்கெட் அணிகளில், திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை பார்க்க முடியவில்லை. இது அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என கருதுகிறேன்.

பேட்டிங் பலம்: பேட்டிங்கை பொறுத்த வரை, சுரேஷ் ரெயனா, ரோகித் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர். ஐதராபாத் வீரர் அம்பாட்டி ராயுடு திறமையான அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருவார் என எதிர்பார்க்கிறேன்.

கர்நாடகா அணியில் பல வீரர்கள் அசத்தி வருவதாக, டிராவிட்டும் தெரிவித்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை எதிர்காலத்திலும் பலமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆபத்து இல்லை: "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியால், டெஸ்ட் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. பாரம்பரியமிக்க இவ்வகை போட்டிகளில் விளையாடவே, இளம் வீரர்கள் விரும்புகின்றனர்.

ஏனெனில் வீரர்களின் உண்மையான திறனை வெளிப்படுத்துவது டெஸ்ட் போட்டிகள் தான். ஒரு நாள் போட்டிகளுக்கு தான், தற்போது ஆபத்து. இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவோம் *காம்பிர் நம்பிக்கை

டெஸ்ட் தொடரில் அனுபவ வீரர் டிராவிட் இல்லாதது பின்னடைவு. இவர் இல்லாத நிலையலும், தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவோம்,'' என, இந்திய வீரர் காம்பிர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 6ம் தேதி நாக்பூரில் துவங்குகிறது. இதுகுறித்து சென்னையில் நடந்த தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வீரர் காம்பிர் கூறியதாவது:

வங்கதேச தொடரை கைப்பற்றியதன்மூலம், இந்திய அணி 2010ம் ஆண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிநடை அடுத்து வரவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தொடரும் என நம்புகிறேன்.

இத்தொடரில் காயம் காரணமாக அனுபவ வீரர் டிராவிட் பங்கேற்காதது, இந்திய அணிக்கு சற்று பின்னடைவு. இருப்பினும், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது.

எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும். சமீபகாலமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எழுச்சி கண்டுள்ளது. ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் துல்லியமாக பந்துவீசுகின்றனர்.

எனவே இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து முழுதிறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி, "நம்பர்-1' அணி என்பதை நிரூபிக்கலாம்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.

இந்திய தொடர்: ஸ்மித் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் கைகொடுப்பார்கள்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி இன்று இந்தியா வருகிறது. இங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் பிப்., 6ல் நாக்பூரில் துவங்கவுள்ளது.

அதற்கு முன்னதாக பிப்., 2 ம் தேதி துவங்கும் தென் ஆப்ரிக்க அணி, இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

சமீபத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் விலகினார்.

பின் தேர்வுக்குழு அதிரடியாக கலைக்கப்பட்டது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல், தங்களது அணி இந்தியாவில் சாதிக்கும் என கேப்டன் ஸ்மித், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும் அணிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் எங்கள் வீரர்கள் இந்தியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இம்முறையும் சிறப்பான ஆடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

சிக்கலான நேரங்களில், அசத்தலாக செயல்பட்டு எப்படி மீண்டு வருவது என்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக நன்கு அறிந்துள்ளனர். இந்த அனுபவத்துடன் அணியில் உள்ள சீனியர் வீரர்கள், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுவார்கள்.

பயிற்சியாளர் ராஜினாமா, தேர்வுக்குழு கலைப்பு என கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தது. அவற்றை எல்லாம் மறந்து இந்தியாவில் சாதிப்போம் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்மித் கூறினார்.

சிறந்த அணி:

இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள வான் ஜில் கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை வெல்வதற்கு தேவையான அளவில் வீரர்களை தயார்படுத்துவோம்,'' என்றார்.

தென் ஆப்ரிக்காவை வீழ்த்த கபில் "ஐடியா'

இந்திய அணியின் பலம் சுழற்பந்துவீச்சு தான். இதற்கேற்ப தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரின் போது ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும், '' என, கபில் தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதுகுறித்து இந்திய "ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவை பொறுத்தவரை ஜாகிர் கான் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார். அவரைத் தவிர, போட்டிகளில் சாதிக்கக்கூடிய அளவில் வேறு யாரும் இல்லை. இஷாந்த் சர்மாவின் பலமே அவரது "இன்ஸ்விங்' பவுலிங் தான்.

இதை பேட்ஸ்மேன்கள் எளிதாக தெரிந்து கொள்வதால் தான், அவரால் சாதிக்க முடியவில்லை. போட்டிகளில் சிறப்பாக செயல்பட, இஷாந்த் சர்மா புதிய வழிகளை காண வேண்டும். ஒருவேளை இவரால் முடியாத பட்சத்தில் அணிக்கு, ஏமாற்றமாகிவிடும்.


சுழலுக்கு சாதகம்:

ஆனால் நமது அணியுடன் ஒப்பிடுகையில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறமை வாய்ந்தவர்கள். நமது பலம், சுழற் பந்து வீச்சு தான். இதனால் வரவிருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.


திறமை உள்ளது:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹாட்லி கூறியது:

இந்திய அணியை பொறுத்தவரையில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களால் சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி போட்டிகளை வென்று தரமுடியும். டெஸ்ட், ஒருநாள் அல்லது "டுவென்டி-20' என போட்டிக்கு தகுந்து விரைவில் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இதுபோன்று உடனடியாக மாறுவது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினம்.


சிறப்பான நிர்வாகம்:

ஆனால் லேசாக சோர்ந்து விடுவது, காயமடைவது, விரைவில் இளைத்துவிடுவது போன்ற காரணங்களால் பார்மை இழந்து விடுகிறார்கள். ஒருசில போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், அடுத்து டெஸ்ட் போட்டிக்கு தகுந்து, புத்துணர்ச்சியுடன் வர வேண்டும். இந்த வீரர்களை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு ரிச்சர்டு ஹாட்லி கூறினார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி கூறுகையில்,"" சில வீரர்கள் புதிதாக அறிமுகமாகும் போது எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாக செயல்படுகிறார்கள். பின் படிப்படியாக ஏமாற்றம் தருகிறார்கள். ஜாகிர் கான், மெக்ராத் போன்றவர்கள் நீண்ட காலம் சாதிக்கின்றனர்.

அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்பது தான் இதற்கு காரணம். இதனால் சில போட்டிகளில் மகிழ்ச்சி, சில ஆட்டங்களில் ஏமாற்றம் கிடைக்கும். இந்த ஏமாற்றத்தை அவர்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் "பார்ம்' இழக்கிறார்கள்,'' என்றார்.