இந்தியாவை காவு வாங்கிய தவறான தீர்ப்பு



ஆக்லாந்து டெஸ்டில் அம்பயர்களின் தவறான தீர்ப்பு, இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. முக்கியமான கட்டத்தில் ரகானே, கேப்டன் தோனிக்கு தவறாக ‘அவுட்’ கொடுக்கப்பட்டதால் வெற்றி பறிபோனது. 

துணிச்சலாக போராடிய ஷிகர் தவான் சதம் வீணானது. 40 ரன்களில் வென்ற நியூசிலாந்து அணி, தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஆக்லாந்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503, இந்தியா 202 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ரன்களுக்கு சுருண்டது. 

இதையடுத்து இந்திய அணிக்கு 407 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, ஒரு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 


கோஹ்லி அரைசதம்:

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு புஜாரா (23) ஏமாற்றினார். பின் விராத் கோஹ்லி, ஷிகர் தவான் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். 

இவர்கள் 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து நம்பிக்கை தந்தனர். சோதி ஓவரில் 3 பவுண்டரி விளாசிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 67 ரன்கள் எடுத்த போது வாக்னர் பந்தில் அவுட்டானர்.

எதிர்முனையில் தன்பங்கிற்கு சோதி பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்த ஷிகர் தவான் (115), தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து, அவுட்டானார். தொடர்ந்து வந்த ரகானே (18) அம்பயரின் தவறான தீர்ப்பால் வெளியேற, தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.


ரோகித் ஏமாற்றம்:

சவுத்தி பந்தில் ரோகித் சர்மா (19) நடையை கட்டினார். தொடர்ந்து வந்த ரவிந்திர ஜடேஜாவின் துணையுடன் கேப்டன் தோனி துணிச்சலாக போராடினார். இவர்கள், ஒருநாள் போட்டி போல் விரைவாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி இலக்கை நோக்கி சீராக முன்னேறியது.

வெற்றி பெற 83 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுல்ட் பந்தில் தேவையில்லாத ‘ஷாட்’ அடித்த ரவிந்திர ஜடேஜா (26) அவுட்டானார். ஜாகிர் கான் (17) ஓரளவு கைகொடுத்தார். தோனிக்கு (39) எதிராக அம்பயர் தீர்ப்பு அமைய, இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 366 ரன்களுக்கு  ‘ஆல் அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. 

ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் தட்டிச்சென்றார். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் வெலிங்டனில் துவங்குகிறது.


2வது வீரர்

அன்னிய மண்ணில் 4வது இன்னிங்சில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் ஷிகர் தவான். முன்னதாக 1979ல் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த டெஸ்டில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்தார்.

* இப்போட்டியில் 115 ரன்கள் விளாசிய தவான், 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்தார். 

ஹர்பஜன், காம்பிருக்கு சோதனை



நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி, இன்று பெங்களூருவில் துவங்குகிறது.   

ரஞ்சி கோப்பை தொடர் துவங்கி (1934) 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கடந்த 1959–60 முதல் இரானி கோப்பை போட்டி (5 நாட்கள்) நடக்கிறது. இதில், ரஞ்சி கோப்பை தொடரின் ‘நடப்பு சாம்பியன்’ மற்றும் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும்.

இதையடுத்து, இந்த ஆண்டு பட்டம் வென்ற கர்நாடக அணி, ஹர்பஜன் சிங் தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியை எதிர்த்து இன்று பெங்களூருவில் களமிறங்குகிறது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்த தடுமாறுகிறார். இந்நிலையில், ஹர்பஜன் சிங் சாதிக்கும் பட்சத்தில் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல ஷிகர் தவான், முரளி விஜய் இருவரும் இந்திய அணிக்கு சரியான துவக்கம் தர தவறுகின்றனர். இதனால், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு காம்பிர் சிறந்த ரன்குவிப்பை கொடுத்தால், இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாம். 

தவிர, மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் (1,223 ரன்கள்), பங்கஜ் சிங், அசோக் டிண்டா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோனும் உதவுவர் எனத் தெரிகிறது. 


சொந்தமண் பலம்:

கர்நாடக அணி சொந்தமண்ணில் களமிறங்குவது பலம். தவிர, ஸ்டூவர்ட் பின்னி, மனிஷ் பாண்டே, உத்தப்பா, லோகேஷ் ராகுல், காருண் நாயர் பேட்டிங்கில் கைகொடுக்க காத்திருக்கின்றனர். பவுலிங்கில் கேப்டன் வினய் குமார், அபிமன்யு மிதுன், ஸ்ரீநாத் அரவிந்த் உதவலாம்.

குளிர்கால ஒலிம்பிக் கோலாகல துவக்கம்



குளிர்கால ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.

ரஷ்யாவின் சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. இதில், 88 நாடுகளை சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

இதன் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று ரஷ்யாவின் பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

ஆடல், பாடல், ‘லேசர் ஷோ’, வாணவேடிக்கை என நிகழ்ச்சிகள் களை கட்டின. 


இந்தியா பரிதாபம்:

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைப்படி தேர்தலை நடத்தாத, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) தடை செய்யப்பட்டது. 

இதனால், நேற்றைய அணிவகுப்பின் போது ஷிவ் கேசவன், ஹமிான்சு தாகூர் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடி ஏந்தி வராதது பெரும் அவமானமாக அமைந்தது. 

இவர்கள் ‘சுதந்திரமான வீரர்கள்’ என்ற அடிப்படையில் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது



வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். 

அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய நிலையில் அந்த நாட்டு அணியில் கடைப்பிடிக்கப்படும் இன ரீதியான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி 2001–ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறினார். 

இதன் பின்னர் 2004–ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்த கெவின் பீட்டர்சன் அருமையான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்தாலும், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகும். 

2008–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கெவின் பீட்டர்சன், பயிற்சியாளர் பீட்டர் மூர்சுடனான மோதல் காரணமாக 5 மாதத்தில் கேப்டன் பதவியை இழந்தார். 

இதுமட்டுமின்றி 2012–ம் ஆண்டில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விமர்சித்து சமூக வலைதளம் மூலம் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார். 

2010–ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கெவின் பீட்டர்சன் 2005, 2009, 2010–11, 2013–ம் ஆண்டுகளில் ஆஷஸ் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார். 

சமீபத்தில் 0–5 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருந்த கெவின் பீட்டர்சன் மோசமான ஆட்டம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ‘அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. 

எனவே தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து அணியை வலுப்படுத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு கட்டமாக பயிற்சியாளர் ஆண்டி பிளவர் நீக்கப்பட்டார். மேலும் கெவின் பீட்டர்சனையும் அணியில் இருந்து முழுமையாக கழற்றி விடுவது என்ற துணிச்சலான நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. 

இந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் வங்காளதேசத்தில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது, பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. ‘அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு புதிய வலுவான அணியை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அணி நிர்வாகத்தினரால் ஒருமனதாக எடுக்கப்பட்டது. 

இருப்பினும் பீட்டர்சனை நீக்க எடுத்த முடிவு கடினமானதாகும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பீட்டர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து விளையாடியது பெருமையாக கருதுகிறேன். எனது நம்பமுடியாத கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

இங்கிலாந்து அணியின் அற்புதமான வெற்றிகளில் பங்கேற்றதையும், சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடியதையும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். இருப்பினும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.   

33 வயதான கெவின் பீட்டர்சன் 104 டெஸ்டில் விளையாடி 23 சதங்களுடன் 8181 ரன்னும், 136 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதங்களுடன் 4440 ரன்னும், இருபது ஓவர் போட்டியில் 37 ஆட்டத்தில் விளையாடி 1176 ரன்னும் எடுத்துள்ளார்.

முத்தான மூன்று கலவை கோஹ்லி



சச்சின், டிராவிட், சேவக் ஆகிய மூன்று வீரர்களின் கலவையாக இளம் விராத் கோஹ்லி உள்ளார்,’’ என, மார்டின் குரோவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. நியூசிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதுவரை பங்கேற்ற 130 ஒருநாள் போட்டிகளில் 18 சதம், 30 அரைசதம் உட்பட மொத்தம் 5,445 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறியது:

இந்தியாவின் அசத்தலான இளம் வீரர் கோஹ்லி. இவர் சச்சின், டிராவிட், சேவக் என, மூன்று பேரும் சேர்ந்த கலவையாக உள்ளார். டிராவிட்டிடம் இருந்து தீவிரமாக போராடும் குணம், சேவக்கிடம் இருக்கும் துணிச்சலை பெற்றுள்ள இவர், சச்சினைப் போல அசாதாரணமான வீரராக உள்ளார். 

மொத்தத்தில், இவர்களிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்று, தனக்கென தனி பாணியை வகுத்துள்ளார். இவை அனைத்தும் சேர்ந்து கோஹ்லியை சிறப்பான வீரராக மட்டும் மாற்றவில்லை. 

கிரிக்கெட்டில் ஒரு சிறந்த மேதையாக உருவாக்கியுள்ளது. அதாவது மாணவனாக இருந்த இவர், ஆசிரியராக விரைவில் மாறிவிட்டார். எதிர்காலத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிடுவார்.

கடந்த 2008ல் நடந்த பிரிமியர் தொடரில், பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதே கோஹ்லியை கவனித்தேன். கிரிக்கெட்டினை கற்றுக்கொள்ளும் ஆர்வம், எழுச்சி அதிகமாக இருந்தது.

அதிகமான குழப்பம் காரணமாக, யாரைப் போல, எப்படி விளையாடுவது என, கேட்பார். எதைப்பற்றியும் சிந்திக்காமல் நேராக அடித்து விளையாடினால் போதும் என, அவரை உற்சாகப்படுத்தினேன். இன்று இதுதான் இவருக்கு ‘பெஸ்ட் ஷாட்’ ஆகவுள்ளது. 

தவிர, துணிச்சலாகவும், அழகாகவும் அடித்து விளையாடுவது தான் இவரது ‘ஸ்டைல்’. தவிர, சச்சினிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டுள்ளார். கோஹ்லியின் குணத்தை பார்க்கும் போது பெரும்பாலும் சச்சினைப் போலவுள்ளது.

அடுத்து வரும் ஆண்டுகளில், ஏறக்குறைய சச்சினைப் போலவே மாறிவிடுவார். அதேநேரம், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது. சச்சின், டிராவிட் போன்றவர்கள் கோஹ்லிக்கு இதை கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு மார்டின் குரோவ் கூறினார்.